பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு



231


இவர்கள் பிள்ளையாராகப் பிடித்தால் தான் பிள்ளையாரே தவிர, சாணத்தைப் பிள்ளையாராகச் சொல்லவில்லை. ஆதலால்தான் பழைய காலச் சித்தர் சொன்னார்,

‘நட்ட கல்லும் தெய்வமாமோ, நாதன் உள்ளிருக்கையில்’

என்று! கடவுளை அந்தத் திருவுருவத்தில் எழுந்தருளச் செய்வது என்பது ஒரு கலை. அது ஓர் அருள் ஞானக்கலை; யோகக் கலை, எங்கோ வானாக, மண்ணாக, வளியாக, ஒளியாக, உயிராக, ஊனாக, உண்மையுமாய் இன்மையுமாய் இருக்கிற பரம்பொருளை நினைந்து, நினைந்து, உருகி, உருகி, கொஞ்ச நேரம் இதிலே இருக்க வேண்டும் என்று எழுந்தருளச் செய்கிறான். அவனுக்குப் பேச, உறவாட ஒரு துணை வேண்டும். பக்கத்தில் இருக்கும் மனிதனுடன் பேசினால் சேர்ந்தாற்போல் பேச மாட்டேன் என்கிறானே. நேற்றுப் பேசினான்; இன்றைக்குச் சண்டை போட்டுக் கொள்கிறான். நான்கு நாட்களில் சண்டை வந்து விடுகிறது. அவனுக்கு யாரை நம்புவது என்றே புரிய வில்லையே. அவனுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக வேறு யாரையும் - மனிதனையே பிடிக்க முடியவில்லையே. இதிலாவது அந்தக் காலத்தில் கொஞ்சம் மத நம்பிக்கை இருந்தது; இப்பொழுது வரவரப் பொய்யாகப் போகிறது.

ஆதலாலே, அவனுக்கு நம்பிக்கையாகப் பேச உறவாட வேண்டும். அதனால்தான் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றில் சேக்கிழார், கடவுளை வாழ்வுப் பொருளாக ஆக்கிக் காட்டுகிறார். அவர் காலத்திலேயே கடவுளை வாழ்த்துப் பொருளாக்கி, கோயில் பொருளாக்கி, குருக்கள் பொருளாக்கி, அதை மேட்டுக் குடியினருக்குரிய பொருளாக்கி அதற்கு ஒரு சிறைக்கூடமே அமைத்து விட்டார்கள். சேக்கிழார் அதை உடைத்து, அதை வாழ்க்கைப் பொருளாக்கி, ‘உனக்குப் பொன் வேண்டுமா? கடவுளிடத்திலே கேள்! உனக்குப் பொருள் வேண்டுமா? கேள்! திருமணம்