பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/246

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மதிப்புள்ள மாடுகளை-கால்நடைகளைக் கவனிப்பதில்லை. தான்ியங்களைப் பாதுகாப்பதில்லை-ஆனால், சிறு காசுகளைக் கூட முடிந்து பத்திரமாகக் காப்பாற்றுகிறார்கள். பணம், பொன் இவற்றில் உள்ள பற்றுதல் குறைந்து பொருள் உற்பத்தித் துறையில் நாட்டு மக்களின் ஆர்வம் பெருக வேண்டும்.

பொருள்களை உற்பத்தி செய்தால் மட்டும் போதாது. உற்பத்தி செய்த பொருள்களை ஓரிடத்தில் குவியாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவை போக மிஞ்சும் பொருளைத் தன்னியல்பாகவே தேவையுடையவர்களுக்குக் கொடுப்பது ஒரு சிறந்த சமுதாய ஒழுக்கம். இப்படி நாம் சொல்வதானது ஈதல், ஏற்றல் என்ற முறையில் அல்ல. திருவள்ளுவர், கடமை உரிமை என்ற அடிப்படையில் இப்பண்பாட்டை ‘ஒப்புரவறிதல்’ என்று குறிப்பிடுகிறார். ஒப்புரவறிதல் அதிகாரத்தில் அவர் பயன் மரம்-கணிகளைக் கணித்துத் தரும் மரங்களை எடுத்துக் காட்டாகக் காட்டுகிறார். மரம் தான் வளர்வதற்காக எரு, தண்ணீர் முதலியவற்றைப் பூமியிலிருந்து எடுத்துக்கொண்டு, உணவாக அதை மாற்றி உண்டு உயிர் வாழ்கிறது. தன்னுடைய தேவை போக எஞ்சிய பொருளைக் காய்களாக-கனிகளாக மாற்றித் தானே தந்து விடுகிறது. அதே போல மனிதனும் தான் உயிர் வாழ்வதற்குத் தான் உற்பத்தி செய்த பொருளில் தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். எஞ்சியதைச் சமுதாய நியதி-ஒழுங்கு என்ற பெயரால் சமுதாயத்திற்குத் தானே தந்து விட வேண்டும். இந்தக கொள்கைக்குப் பெயர் ‘சோஷலிசம்’ என்றால் அதில் என்ன தவறிருக்கிறது? இங்ஙனம் சமுதாயக் கொள்கை அமைப்புக் குறித்து மிக முற்போக்கான கருத்துக்களைச் சொல்லுவதால் திருக்குறளை ஒரு சிறந்த சோஷலிசப் பொருளியல் நூல் என்றும் கூறலாம்.