பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொங்கல் பரிசு



243



சோஷலிசம்

தமிழ் காலத்தால் மூத்த மொழி. கருத்தாலும் மூத்த மொழி. இன்றைக்குச் சற்றேக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது தொல்காப்பியம். இன்று தமிழ் இலக்கியங்களில் மிகப் பழமையானது, தொல்காப்பியமேயாகும். மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே வாழ்க்கை நெறி முறைகளைப் பற்றித் தமிழர்கள் கவலைப்பட்டிருக்கிறார்கள். வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு. தமிழில் எழுத்துக்கும் சொல்லுக்கும் சொல்லோடு தொடர்புடைய பொருளுக்கும் வளர்ந்த இலக்கண மரபுண்டு. ஆரிய மொழியைவிடத் தமிழ் இலக்கண வரம்பிற் சிறந்ததென்று பரஞ்சோதி முனிவர் பாராட்டுகின்றார். எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் மட்டுமில்லாமல் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ். பாட்டுக்குப் பொருள் என்றாலே நல்வாழ்க்கை என்று கருதுவது தமிழ் மரபு. அதனாலன்றோ எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று இலக்கண நூலை முறைப்படுத்தினார்கள். பொருளதிகாரம் தனிமனிதன், அவனுடைய காதல் வாழ்க்கை, ஆகியவற்றை அகத்திணை என்றும், அதே தனிமனிதன் வெளிப்புற உலகத்தோடு கொள்ளும் தொடர்புகளைப் புறத்திணை என்றும் வகுத்துப் பேசுகின்றது. இங்ஙனம், வழிவழியாக வாழ்க்கையின் நெறி முறைகளைப் பற்றித் தமிழினம் கவலைப்பட்டமையின் காரணத்தால் தமிழில் காலத்திற்கும் காலம் அறநெறி நூல்கள் நிறையத் தோன்றின. இங்ஙனம் தோன்றிய நூல்களுள் மிகமிகச் சிறந்தது திருக்குறள். மக்களாகப் பிறந்தோர் பேசுகின்ற வேறு எம்மொழியிலும், திருக்குறளைப்போல் ஒரு வாழ்க்கை நூல் தோன்றியதில்லை. ஏசு பெருமானுக்கு முற்பட்டவராகிய திருவள்ளுவர், மனித இனத்தின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து அரியதொரு நூலைச் செய்துள்