பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெறுகின்றது. இது வாழ்க்கை முறை. தனக்குவமை இல்லாத தலைவனாகிய கடவுள், அன்பின் வடிவமாக இருக்கின்றான். "அன்பே சிவம்" என்பது திருமந்திரம். அன்புடைய வாழ்க்கையைச் சிறப்பித்து, உலகம் ஒரு குரலாகப் பாராட்டுகிறது. தூய அன்பு வாழ்க்கை எல்லை கடந்தது; வேற்றுமைகளைக் கடந்தது; நாடு, இனம், மொழி, அரசியல், சமயம் ஆகிய எல்லைக் கோடுகள் அன்புக்கு இல்லை. ஏன்? அன்பு, நட்பையும், பகையையும் கூடக் கடந்தது. இத்தகைய ஒப்பற்ற அன்பு நெறியை உலகச் சமயங்கள் அனைத்தும் வற்புறுத்துகின்றன. இறைவன் மக்களிடத்தில் பிட்சாடன மூர்த்தியாக வந்து பிச்சை கேட்கின்றான். அவன் கேட்கும் பிச்சை சோறல்ல-காசல்ல-அன்பேயாகும். அவன் கண்ணப்பர் அன்பினைத் துய்த்து மகிழ்ந்தான். இத்தகைய அன்பு வாழ்க்கை எளிதாகத் தோன்றினாலும் நடைமுறைப் படுத்துதல் கடினமானதாகவே இருக்கிறது. அதனால் அன்பு கடுமையானதென்பதல்ல-விரும்பி முயன்றால், எளிமையில் கைவரக் கூடியதேயாகும். ஆயினும் மனிதனைப் பிடித் தாட்டும் பேய்க்குணங்கள் எளிதில் அவனை விட்டு அகல்வதில்லை.

கண்ணாடித் தொட்டிக்குள் வளர்ந்த மீனைப் போல குறுகிய சார்புகளிலேயே பற்றுக்காட்டுகிறான். அப்படிக் காட்டுதல் கூடத் தவறில்லாமல் போகலாம்; பிறிதொன்றின் மீது பகை கொள்ளாமல் இருப்பானானால், அன்பிலிருந்து அன்பு தோன்றுதல் இயற்கை. அதற்கு அறிவும் ஆற்றலும் தேவையில்லை. அன்பிலிருந்து அன்பு தோன்றுதல் மணமுடைய மலரிலிருந்து நறுமணச் சாந்தும், சாறும் தயாரிப்பதுபோல், மலரிலிருந்து நறுமணச் சாறு எடுப்பதை விடச் செடி நறுமலரைத் தருவதுதான் அருமை. மனிதன் தன்னோடு அன்பாகப் பழகும் நண்பர்களுக்கே அன்பு காட்டக் கடமைப் பட்டிருப்பதாகக் கருதுகின்றான். அஃது அவனுடைய ஒரு சாதாரணக் கடமை. ஆனால் இன்றைய