பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/264

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மேலும் தோன்றிய அளவிலேயே அழிந்தும் போகிறது. குணத்தின் உண்மை அக்குணமுடையவனின் செயலினாலேயே உணரப்படும். ஆதலால், பிறருக்கு உதவி செய்யும் வாய்ப்பினை, கதிரவன் ஒளியை வரவேற்று மகிழும் தாமரையைப் போல, மகிழ்வோடு வரவேற்கும் பண்பு தேவை. அதனாலன்றோ எல்லோருக்கும் கொடுக்கும் இறைவன் வாங்கவும் செய்கிறான். அவன் வாங்குவதின் மூலம் சமூதாயத்திற்கு உதவும் பண்பை ஊட்டி வளர்க்கிறான்.

தாய்தான் தன் குழந்தைக்கு மிட்டாய் வாங்கித் தருகிறாள். குழந்தை, தான் கடித்த மிட்டாயைத் தாய்க்குக் கொடுக்கிறது. அப்பொழுது அவள் அதை விரும்பி ஏற்கிறாள். எச்சில் என்றும் பாராமல் ஏற்கிறாள். அன்பு உள்ள இடத்தில் எச்சிலும் தீட்டும் இல்லை. காதல் வாழ்க்கையில் எச்சிலை அமிழ்தம் என்றார் திருவள்ளுவர். பக்தி வாழ்க்கையில் கண்ணப்பரின் எச்சிலைத் தூய கலச நீர் என்றார் சேக்கிழார். குரு சீட வாழ்க்கையில் எச்சிலைப் பிறப்பறுக்கும் மருந்து என்றார் குமரகுருபரர். எதை இழந்தாலும் இழக்கலாம்; பிறருக்கு உதவி செய்யும் வாய்ப்பை இழக்கவே கூடாது. தோன்றி வளரும் அன்பினை அழிக்கும் நோயும் உண்டு. நோய், பகை இரண்டும் அற்ப மனிதனை அழிக்கும்; நல்ல மனிதனை வளர்க்கும். இன்னாதனவே செய்கின்ற மனிதன் சூழலில் அன்பு நெறியில் வளரும் மனிதனின் சால்பு உறுதியுடையதாக இருக்கும்.

இயேசுவின் அன்பும் அப்பரடிகளின் அருளும் சான்றாண்மைக்குச் சான்று. இவர்களின் அன்பு மற்றவர் தந்த துன்பங்களை உரமாகக் கொண்டு வளர்ந்து உறுதி நிலை பெற்றது. அன்புடைமைக்கு வரும் கொடிய நோய் அப்பட்டமான தன்னலம். ஆயினும் பிறர் வாழ்க்கையோடு இணையாத தன் வாழ்க்கை கேடுடையது. அதனினும்