பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்



263


வழங்குவது பிச்சையே. அஃது ஈதலும் அன்று; கொடையும் அன்று. அறமும் அன்று. அதனாலேயே “இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்” அறம் என்றார் வள்ளுவர். இங்ஙனம் வறுமையை மாற்றும் வகையில் வழங்கி வாழ வேண்டுமென்றால் சற்றும் தளர்வில்லாத தாளாண்மை வேண்டும்.

சங்க காலக் கவிஞன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி இந்த உலகம் இருந்தது; இருந்து கொண்டிருக்கிறது; ஏன்? என்று வினாக் கேட்டு விடை சொல்கின்றான். தனக்கென முயலாது பிறர்க்கென முயன்று, உழைப்பில் ஈடுபடுகின்ற உழைப்புத் தவம் செய்யும் கண்களையுடையவர்கள் பலர் வாழ்வதால் உலகம் இருந்தது. இருந்து கொண்டிருக்கிறது, என்று விடை கூறுகின்றான். “உண்டாலம்ம இவ்வுலகம்” என்று தொடங்கும் பாடலில் “தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுநர் உண்மையானே” என்று குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவடிகளையே உயிர்கள் தொழுகின்றன. ஏன்? திருவடிகளே உயிர்களைத் தாங்கித் தண்ணருள் சுரக்கின்றன. வாளில் காட்டும் ஆண்மையிலும் தாளில் காட்டும் ஆண்மை-அதாவது தாளாண்மை பெருமைக்குரியது; பாராட்டுதலுக்குரியது; இன்மையும் மறுமையும் தரத்தக்கது. வாளில் காட்டும் ஆண்மை நெடிய வரலாறல்ல. தாளாண்மையே நெடிய வரலாறு.

உலகம் தோன்றிய நாள் தொட்டு உலகின் வரலாற்றோடு உயிர் வர்க்கத்தின் வாழ்க்கையோடு வாள் மோதித் துன்பம் விளைவித்தது உண்மை. ஆனால் தாளாண்மை அந்த இன்னல்களையெல்லாம் கடந்து உலகத்தை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது. இனி தொடர்ந்து மேலும் வாழ்விக்கும்.