பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யின்மையால் செய்யத் தொடங்கிய பணியைத் தொடர்ந்து செய்ய மாட்டார்கள். எந்த ஒரு பணியையும் அவர்கள் பழக்கப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்; வழக்கப் படுத்திக் கொள்ள மாட்டார்கள். செயல் செய்தலைப் பழக்க, வழக்கப்படுத்திக் கொண்டாலே நிறையப் பணிகளைச் செய்யலாம். இடையீடின்றிச் செய்யலாம். பணியைத் தொடங்கிய பிறகு இடையில் இல்லாத காரணங்களைச் சொல்லி நிறுத்தி விடுவது நல்லதல்ல. இது பணி செய்யும் பாங்கினையும் கெடுக்கும். நம்பிக்கையைச் சிதைக்கும். உள்ளத்தின் உறுதியைக் குலைக்கும். செயல் செய்யத் தொடங்கி, செயலை முற்றாகச் செய்து முடிக்காது இடையில் விடுவது துன்பத்தைத் தரும். பெருமையைக் குறைக்கும். உலகம் அவர்களை ஒரு பொருளாக மதிக்காது.

எண்ணித் துணிக துணிந்த பின் தொழிற்படுக; துணிவோடு தொழிற்படுக. வெற்றி தோல்விகளில், ஆசை வலையில் விழாது தொடர்ந்து தொழிற்படுக. செயலினை மூச்சாகக் கொள்க! தொடங்கிய செயலை முடிக்காது வாழ்தல் அறமன்று. அதற்குச் செயற்களத்தில் சாதலே அறங்கூறும் ஆக்கந் தரும்.

ஒரு செயலைத் தொடங்கி, அதை முற்றாக முடிக்காமல் பத்திரமாக வைத்துவிட்டு, வேறு ஒரு செயலைத் தொடங்குதல் நெறியன்று. ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க! இனிதே செய்க! என்பது ஆன்றோர் வாக்கு. சீவி முடிக்கப் பெறாத தலையும், செயலுக்கு வராத சிந்தனையும், கடவுள் எழுந்தருளாத திருக்கோயிலும், மகப் பேறிலாத மனை வாழ்க்கையும் தொண்டின் துன்பம் தெரியாத துறவு வாழ்க்கையும், பயனுடையதல்ல. அது போல தொடங்கிய செயலைத் தொடர்ந்து செய்து முடிக்காத வாழ்க்கை வாழ்க்கையன்று. அந்த வாழ்க்கையை இன்றைய உலகமும் மதிக்காது. நாளைய உலகமும் பாராட்டாது.