பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/272

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



முயற்சியை முயற்சிக்காகவே தொடங்க வேண்டும். முயற்சி யெடுக்கப்பெறும் காரியங்களை நிறைவேற்றி முடிப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் பற்றி அவசியம் இல்லாத அளவுக்கு எண்ணி அலட்டிக் கொள்ளக் கூடாது. முயற்சியின் விளைவுகளைப் பற்றியும் உறும் பயன்களைப் பற்றியும் கற்பனை செய்து கவலையில் ஆழக் கூடாது. முடியுமா? என்ற கேள்வி தோல்வியின் தொடக்கம். முடியுமா? என்று நினைக்கத் தொடங்கும்போதே செயலூக்கம் சிதறி அழிந்து போகும். உலகத்தில் மகத்தான் பணிகளைச் செய்து வெற்றி பெற்றவர்கள் முயற்சியினாலேயே செய்தார்கள். சிலர் சூழ்நிலைகளைச் சார்ந்து வாழத் தலைப்படுவர். சூழ்நிலையை அனுசரித்தல் தவறன்று. ஆனால் சூழ்நிலையை முற்றாக நம்பி சூழ்நிலைக்கு ஆட்படுதல் வளர்ச்சிக்கு வழி செய்யாது. சூழ்நிலையின் விலங்குக்கு ஆட்படுதல் விலங்குகளுக்கே உரியது. மனிதன் சூழ்நிலைகளை வெற்றி காண வேண்டும்.

பணிகளைத் தொடங்கும் முன், பணிகளின் தரம், அப் பணியினால் சமுதாயம் அடையும் நன்மை, ஆகியவைகளைப் பற்றியே எண்ண வேண்டும்! அங்ஙணமின்றித் தன்னுடைய அன்றையச் சூழலை நினைந்து முடியுமோ, முடியாதோ என்று ஊசலாடுவது; தன்னுடைய அறிவையும், ஆற்றலையும் நம்பாது ஜோசியத்தை நம்புவது; இராசிப் பலனைப் படித்து மயங்குவது; ஆகிய கெட்ட பழக்கங்கள் ஊக்கக் கிளர்ச்சிக்கு எதிரானவை. ஊக்கக் கிளர்ச்சி குறைந்து போனால் அயற்சியே தலைகாட்டும். தன்னம்பிக்கை தளரும். பயம் குடிகொள்ளும். தோல்வி மனப்பான்மை தலைதுாக்கும். உண்மையில் பெருமையில்லாத பெருமையைப் பற்றிக் கவலைப்படும். பெருமை யென்பது வெற்றி தோல்விகளை மையமாகக் கொண்டு நிர்ணயிப்பது அல்ல. எத்தனையோ வெற்றிகள் சிறுமையைத் தந்திருக்கின்றன. எத்தனையோ தோல்விகள் பெருமையைத் தந்திருக்கின்றன. பெருமையை