பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/274

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தீர்வு காணவல்லது. எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பது கேள்வியல்ல. எப்படி வாழ்ந்தோம் என்பதே கேள்வி. அதனாலன்றோ மாணிக்கவாசகர் ‘வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே’ என்று இடித்துரைக்கின்றார். வாழும் வகையில் வாழாத வாழ்க்கை பயனற்றது. ஆதலால் அது வாழ்வன்று. அப்பரடிகளும் "பேசாத நாள் பிறவாத நாள்" என்பார். வாழும் வகையே வளத்திற்கு அடிப்படை. வரலாற்றுக்கு ஊற்றுக் கண். அதனாலன்றோ வள்ளுவம் "வாழ்வாங்கு வாழ்க!" என்ற ஆணையிட்டது.

சுவைத்து உண்கின்றோம். ஆனாலும் சுவைத்து வாழ்வதில்லை. மற்றவர்களிடமிருந்து ஆயிரம் ஆயிரம் எதிர் பார்க்கிறோம். ஆனால் மற்றவர்கள் நம்மிடம் எதிர் பார்ப்பதற்கு உரிமை உண்டு என்பதை மறந்து விடுகிறோம். பசுவைக் காயவைத்துக் கறந்து வாழ்வோரும் உண்டு. அதுபோல அன்புப் பசுவைக் காயவைத்து வாழ முயல்வது வறண்ட பாலைவனத்தில் தளிரைத் தேடியது போலாகும்.

உடைமைகள் இல்லையேயென்று உடைமையற்றவர்கள் ஏங்குகிறார்கள். உடைமை உடையவர்கள், காப்பதற்கு ஆளில்லையே என்று கலங்குகிறார்கள். இஃது ஒரு விநோதமான வறுமை. அதனாலன்றோ இன்றையச் செல்வத்தில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாத விழுக்காடு காவலுக்கென்று செலவழிக்கப் பெறுகிறது. எங்கும் எதிலும் அன்பு முத்திரைக்குப் பதில் காவல் முத்திரைகள் இடம் பெற்றுள்ளன. எந்தையும் தாயும் எழுந்தருளியுள்ள கோயிலே இன்று கண்காணிப்புக்கும் காவலுக்கும் ஆளாகியிருக்கிறது. எல்லா நாட்டு அரசுகளும் படைகளுக்கென்று ஒதுக்கும் பொருள்தொகை மனித குலத்தின் பஞ்சத்தை மாற்றவல்ல பெருந்தொகையாகும். ஒரு புறம் படைப் பெருக்கம். பிறிதொரு புறம் பஞ்சத்தின் வளர்ச்சி.