பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/281

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்



277


மாசுபடுத்தப்பட்டுள்ளது; மிகவும் மாசுபடுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் மேலும் மேலும் மாசுறுகிறது. காற்றுக்கேடு செய்யும் தீமை முற்றாகத் தடுக்கப் பெறவில்லை. மரங்களும் போதிய அளவு இல்லை. இருந்தவையும் வெட்டப் பட்டுவிட்டன. தூய காற்று வழங்கும் நாடாக நமது நாடு அமையவேண்டும். அடுத்து, வாழ்க்கைக்குத் தேவை குடிதண்ணீர். நாள்தோறும் நாலு குவளை நல்ல தண்ணீர் நாலு காதத்திற்குப் பிணியை விரட்டும். குடிப்பதற்கு ஊற்று நீரே நல்லது. அஃதாவது பாதுகாக்கப் பெற்ற கிணற்று நீர் நல்லது. இத்துறையில் நமது நாடு எவ்வளவோ பணி செய்திருக்கிறது. ஆனாலும் இன்னமும் பற்றாக்குறைதான்.

அடுத்தது உணவு. உணவு கிடைத்தால் மட்டும் போதாது. நல்ல உணவு - சமநிலைச் சத்துணவு கிடைக்க வேண்டும். காய்கள், கனிகள், பால் மற்றும் எல்லாவகையான உணவுப் பண்டங்களும் தாராளமாகக் கிடைக்க வேண்டும். ஒவ்வொருவரும் சராசரித் தேவையான 2400 கலோரி ஆற்றல் கிடைக்கக்கூடிய அளவு உண்டால் நல்லது. அங்ஙனம் நமது நாட்டில் இப்போது கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உண்ணும் பழக்கம் வரவில்லை . நமது உணவுப் பழக்கம் மாற வேண்டும். அதற்கு உரியவாறு நாட்டில் உணவு வசதிகள் அமையவேண்டும். சராசரி மனிதனும் சீரான உணவு வசதியைப் பெறத்தக்க வகையில் வருவாய் வரவேண்டும். விலைகளும் கட்டுப்படியானதாக அமைய வேண்டும்.

குடிமக்களின் வருவாய்க்கும் அவர்கள் வாங்கி நுகரக் கூடிய உணவுப் பொருள்களின் விலைக்குமிடையே இன்றுள்ள இடைவெளி மிகவும் கூடுதல். நுகர்பொருள்கள் கட்டுபடியான விலையில் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். மக்கள் நுகர் பொருள்களின் விலைகளை அரசு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரப் புழக்கத்தின் காரணமாக உற்பத்திச் செலவு கூடி, விலை கூடவேண்டிய அவசியம் ஏற்பட்டால் மக்களின்