பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/282

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வருவாய் உயர்வுக்கும் உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாது போனால் குறைந்த வருவாய் உள்ளவர்களுக்குக் கூடுதல் விலைப்படியை வழங்க வேண்டும்.

நல்ல உணவினால் மட்டும் பிணியே வாராமல் போகாது. கெட்ட பழக்கங்கள் காரணமாக நோய் வரும். கள், போதைப் பொருள்கள், பொருந்தா உணவுகள், பகல் நள்ளிரவுக் காட்சிகள் முதலியன தவிர்க்கப்பெறுதல் வேண்டும். இவை நாட்டில் எளிதாகவோ மலிவாகவோ கிடைத்தல் கூடாது. நமக்கு இன்று தேவை, பிணியில்லா மக்கள் வாழுகின்ற நாடு!

மானுட வாழ்வு, முயற்சிகள் நிறைந்த வாழ்வாக அமையவேண்டும். அம்முயற்சிகளும் ஆக்கவழியிலான முயற்சிகளாக அமையவேண்டும். அங்ஙனம் அமைய ஒரு நாடு பகைவர்களின் அச்சுறுத்தலிலிருந்து மீட்கப் பட்டிருக்க வேண்டும். அதாவது பகை இருத்தல் கூடாது. அண்டை நாடுகளுடனும் உலக நாடுகளுடனும் நல்ல வண்ணம் உறவு அமைய வேண்டும். நமது நாட்டின் நிலைக்குப் பாகிஸ்தான் ஒன்றே போதும்! உலகெங்கணும் படைக்கலத்தளங்கள் அமைக்கும் அமெரிக்காவைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? நாம் நடுநிலைக் கொள்கை-அணி சேராக் கொள்கை என்றெல்லாம் ஏற்றுக் கொண்டிருந்தாலும் இந்த நாடுகள் நம்மிடம் பகைமை காட்டாமல் இல்லை. அதன் காரணமாக ஏழை நாடாகிய நம்முடைய நாட்டின் வரவு செலவுத் திட்டத்திலும் படைப்பெருக்கத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கிறது. எண்ணற்றவர்கள் படைத்துறையில் பணி செய்கின்றனர். இவையெல்லாம் அவசியமானவைதாமா? இவற்றைத் தவிர்க்க நாம் தயாராக இருந்தாலும் நம்மிடம் பகை பாராட்டும் நாடுகள் உடன்பட்டு வருவதில்லை. ஆயினும்