பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/290

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உத்தரவாதம் தருதல் வேண்டும். வேலை தரும் வரை அரசு, ஒரு வாழ்நிலைப்படி தரவேண்டும்.

6. நல்ல சுகாதார, மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் மக்களின் சராசரி வாழ்நாளைக் கூட்டுதல் வேண்டும்.

7. கற்க இயலும் அளவுக்குக் கல்வி கற்கும் உரிமை அனைவருக்கும் வேண்டும். எந்த நிலையிலும் கல்வி இலவசமாகவே வழங்கப் பெறுதல் வேண்டும்.

8. சமாதான்மும் அமைதியும் தழுவிய வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இத்தகு வாழ்க்கை வசதி நிறைந்த நாட்டை உருவாக்குவது நமது கடமை. நாட்டுப் பணியில் ஈடுபட எல்லாருக்கும் இயலாது. ஆதலால், நாம் இவற்றை நிறைவேற்றக்கூடிய பிரிதிநிதிகளைத் தேர்வு செய்து அவர்களிடம் நாட்டு ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.

நல்லாட்சியை அமைக்க மக்களுக்கு உரிமை வழங்குவதே வாக்குச் சீட்டு. இந்த வாக்குச் சீட்டு ஆற்றல் மிக்கது; புனிதமானது. நாம் ஒவ்வொருவரும் 21 வயது நிறைந்தவுடனேயே வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது நமது கடமை. தலையாய உரிமையும் கூட. அதுமட்டுமல்ல, வாக்காளரும் ஒரு வகையில் ஒரு பதவியுடையவர் என்று கூடக் கூறலாம்.

நமது நாட்டில் கட்சி ஆட்சி நடைமுறைதான் இருக்கிறது. ஆதலால் தனி ஒருவர் தேர்தலில் கணிப்புக்குரியவர் அல்லர். கட்சியின் அமைப்பு, கட்சியின் கொள்கை, கட்சியின் தலைமை, கட்சியின் சென்ற கால வரலாறு ஆகியனவே கவனத்திற்குரியன; ஆய்வுக்குரியன. அதோடு இந்தக் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் ஆய்வுக்குரியன. நாம் தேர்ந்தெடுப்பவர்கள் ஆட்சியாளர்