பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/291

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்



287


களாக வருபவர்கள். அவர்களுக்கு என்ன தகுதி வேண்டும்? சிறந்த செயல்களைச் செய்வதற்குரிய திறமை வேண்டும். மக்கள் நலனுக்குரியவற்றை நாடிச் செய்யும் அறிவும் தெளிவும் வேண்டும்; உறுதியும் வேண்டும். மக்கள் விரும்புவதைச் செய்து மலிவான விளம்பரத்திற்காகவும் தொடர்ந்து அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மக்களின் அறிவு பூர்வமில்லாத ஆசாபாசங்களுக்கு இரையாகிக் கெடுதல் செய்யக் கூடாது. சிறந்த பணிகளைச் செய்வதற்குரிய கருவிகளைத் தேடி அமைத்துக் கொள்ளும் திறமை வேண்டும். திறமை மட்டும் போதாது. காலமறிந்தும் செய்ய வேண்டும். அதாவது, ஆட்சியில் அமர்பவர்கள் நோய்க்கு மருந்துபோடும் திறமையுள்ளவர்களாக இருந்தால் போதாது. நோயின் காரணத்தையே மாற்றும் செயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதற்குரிய அகக் கருவிகளாகிய அறிவு, திறன் ஆகியன பெற்றிருக்க வேண்டும். புறக்கருவிகளாக விளங்கக்கூடிய தக்காரைத் துணையாகப் பெறுதல் வேண்டும். எல்லாவற்றையும் உரிய காலத்தில் செய்தல் வேண்டும்.

நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் பொழுதும், நல்லாட்சி நடத்தும் பொழுதும் சில தனி நபர்கள் பாதிக்கப்படலாம். அவர்கள் பெரியவர்களாகவும் கூட இருக்கலாம். ஆயினும் தயக்கம் கூடாது. நாட்டின் நலனுடன் சம்பந்தப்பட்ட காரிய சாதனையே குறிக்கோளாக அமைதல் வேண்டும். அடுத்த தேர்தலிலும் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதும் குறிக்கோள்களாக இருக்கக் கூடாது. அதனால் எதிர்ப்புக்கு அஞ்சாது எடுத்த பணியைச் செய்து முடிக்கவேண்டும். நாள்தோறும் ஆட்சியியலுக்குரிய அரசியல், குடிமக்களியல், தொழிலியல், பொருளியல், நிதியியல் நூல்களைக் கற்றறிதல் வேண்டும். நாட்டு மக்களின் உள்ளத்து இயல்புகளையும், மனப் போக்குகளையும்