பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/308

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்ன செய்வது? தவறான பொருளியல் நடை முறையினால் தான் குழந்தைகள் பெற்றோரையும், பின் பெற்றோர்கள் பிள்ளைகளையும் சார்ந்து வாழ்கிறார்கள். சார்ந்து வாழ்தல் சுதந்திரமற்றது; மதிப்பு இழந்தது. தன்மானத்திற்கு எதிரானது. குடும்பங்களில் இரண்டு மூன்று சேமிப்புக் கணக்குகள் தொடங்க வேண்டும். குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு சேமிப்புக் கணக்கு அல்லது ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பிரிமியம் கட்ட வேண்டும். அவர்கள் வளர வளர அந்தச் சேமிப்பும் வளர்ந்து அவர்கள் படிப்பு, திருமணம் முதலிய வற்றிற்குப் பயன்படும். அதுபோகக் குடும்பத்திற்கென ஒரு சேமிப்பு எப்படியும் வருவாயில் 10 விழுக்காட்டுக்குக் குறையாமல் 25 விழுக்காடு வரையில் சேமிக்க வேண்டும். இந்தச் சேமிப்புக்குப் பிறகு எஞ்சிய தொகையில்தான் வாழ்க்கையை நடத்த வேண்டும். வாழ்க்கைச் சடங்குகளைக் குறைந்த செலவில் நடத்த வேண்டும். சாமி கும்பிடுவதில் அதிகம் செலவழிக்கக் கூடாது. பொருட் செல்வம் போற்றுவார்கண் உண்டு, என்ற திருக்குறளை மறவற்க.

11

நீ, தாயாகப் போகும் செய்தி செவிக்கினிய செய்தி! தாய்மைப்பேறு தவம் செய்து பெறும் பேறு. “இறைவன் அடிக்கடி உலகத்திற்கு, தான் வர முடியாமையால் தாயைப் படைத்தான்!” என்று கூறுவர். தாய் அற்புதமான வியக்கத்தக்க படைப்பாளி! தாயின் கருப்பையே மானுடத்திற்கு வடிவம் தருகிறது; பொறி, புலன்களை வழங்குகிறது. கருவுற்ற எட்டாவது மாதத்திலிருந்தே குழந்தைக்குப் புலன்கள் இயங்கத் தொடங்கி விடுகின்றன. இந்தக் காலம் தொட்டே தாய்க்கு நல்ல சிந்தனை தேவை. நல்ல நூல்களைப் படித்தல், படிக்கச் செய்து கேட்டல் முதலிய பழக்கங்கள் தேவை. ஒரு குழந்தை கருவுற்ற எட்டாவது மாதத்திலிருந்து அது பிறந்து எட்டு வயது