பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/315

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் காட்டும் நீதி



311


வேண்டும். கலப்பு மொழியில் பேசக்கூடாது. எழுதக்கூடாது. தமிழ் மொழியை வடபுலத்தினர் விரும்பி ஏற்றுக் கற்க வேண்டும்.

அதற்குரியவற்றை வடபுலத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் செய்ய வேண்டும். நடுவண் அரசும் தமிழ் நாடு அரசும் செய்ய வேண்டும்.

ஒரு மொழியைப் பேசவும் எழுதவும் ஆறு மாதத்திற்குள் கற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளை உண்டாக்க வேண்டும். நாடு முழுவதும் பன்மொழிப் பயிற்சியகங்களை மாலை நேரக் கல்வி நிலையங்களைத் தொடங்க வேண்டும்.

ஒருபுறம் சாதிகளின் தீமைகள் பற்றிப் பேசப்படுகிறது; பிறிதொருபுறம் சாதிகளை இறுக்கமாக்கும் வகையில் நடைமுறைகள் இருந்து வருகின்றன. பகுத்தறிவாளர்கள் சாதிகளின் தோற்றம், வளர்ச்சிக்கு மதங்களே காரணம் என்று கூறுகின்றனர்.

இது முற்றும் உண்மையன்று. வரலாற்று அடிப்படையில் நோக்கினால் நிலப் பிரபுத்துவத்தில் பிறந்து வளர்ந்ததுதான் சாதி முறை. இந்தச் சாதிமுறையை நிலப் பிரபுத்துவத்திற்கு அனுசரணையாக அங்கீகரித்த பாவத்தை மதம் செய்தது உண்மை.

ஆனால், சமய நெறியாளர்கள் தொடர்ந்து தீண்டாமையையும் சாதி வைப்புக்களையும் எதிர்த்து வந்துள்ளனர். திருவள்ளுவர், அப்பரடிகள், திருப்பாணாழ்வார், இராமாநுஜர் வள்ளலார், பாரதியார் ஆகியோர் இவர்களில் முன்னணியில் நிற்பவர்கள்.

பழங்காலத்தில் சாதி முறைகள் இருந்தாலும் நெகிழ்ந்து கொடுத்தன. சாதி வேறுபாடுகளின்றிப் பழகினர்; உறவு கொண்டு வாழ்ந்தனர். உறவு கலந்து பழகி ஒன்றாக உண்டு வாழ்ந்தனர். கலப்புத் திருமணங்கள் சந்தடியின்றி நடந்தன.