பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/328

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
அருளும் - துறவும்

மனிதன் பெறக்கூடிய இணையற்ற செல்வம், அருளுடைமையாம். அதாவது, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து ஒழுகும் அருளொழுக்கமாகும். வார்த்தைகளால் எளிமை போலத் தோன்றினும் அருளுடையராதல் அரிதினும் அரிது. எளிய சாதனமாகிய அன்பு நெறியிலேயே இன்னமும் மனிதன் தட்டுத் தடுமாறிக் கொண்டேயிருக்கிறான். அதாவது தனக்குப் பயன்படுவோருக்குத் தானும் மீண்டும் அவ்வண்ணமே பயன்படவேண்டும் என்ற உணர்வின்றி, அடித்தும், கெடுத்தும், எடுத்தும் விலங்கினைப் போலத் தின்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். அன்பிலும் முதிர்ந்தது அருள். அன்பு தாய்; அஃதீன்ற சேய் அருள் என்பர் வள்ளுவர். இந்த உலகில் யார்மாட்டும் எதன் மாட்டும் அன்புகாட்டி வாழ்வித்து வாழும் உணர்ச்சியே அருள் உணர்ச்சி. அருள் உணர்ச்சி உள்ள இடத்தில் தன்னலம் இல்லை; தன்னயம் இல்லை; தன் நுகர்வு இல்லை. அருளுணர்ச்சி யுடையாருக்கு இன்பமென்பதே பிறர் இன்புறுவதேயாகும். இத்தகு அருள் உணர்வு திடீரென ஒருநாளில் தோன்றி விடுவதில்லை; அதற்கு இடையறாத பயிற்சி தேவை.