பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/333

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசியல்



329


முறை என்றும் ஒரே நிலையானதாக இருக்க முடியாது. அது மட்டுமன்று. நீதி என்ற தத்துவம் அதனுடைய அடிப்படைக் கருத்துக்கு முரணாகாமல் காலத்துக்குக் காலம் மாறுவதும் உண்டு. ஆதலால், அரசன் தன்னால் பாதுகாக்கப்பெறும் சமுதாயத்தின் தேவைகளை, அந்தச் சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சிக்குரிய நீதிமுறைகளை நாள்தோறும் ஆராய்ந்து அந்தந்த நிலைமைகளுக்கு ஏற்றவாறு நீதியை வழங்க வேண்டும்.

‘நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.’

553

என்பது வள்ளுவம்.

திருவள்ளுவர் பார்வையில் அரசு என்பது வரி மட்டுமே வசூலிக்கும் எந்திரமன்று; அல்லது அதிகாரத்தின் சின்னமுமன்று. அல்லது தண்டனை வழங்கும் ஏகபோக உரிமையுடையதுமன்று. குடிமக்கள் குற்றம் செய்தால் அரசு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது பொதுவான அரசியற் கருத்து. ஆனால், திருவள்ளுவர் குடிமக்களைக் குற்றம் செய்யத் தூண்டாத-அனுமதிக்காத அரசையே அரசு என்று ஏற்றுக் கொள்கிறார். குடிமக்களிடத்தில் குற்றம் காணின் அக்குற்றம் தோன்றுதற்குரிய அரசின் காரணத்தை ஆராய்ந்து அக்குற்றத்தை அகற்றிக் கொள்ளவேண்டும் என்று வள்ளுவர் நெறிமுறை காண்கிறார். அதிகாரக் கட்டிலில் உள்ள அரசு ‘இடு’ என்று கேட்பதையும் கூட வள்ளுவர் உடன்படவில்லை. மக்களின் ஆற்றலுக்கு விஞ்சிய வரிக் கொள்கையை அரசு, நடைமுறைப்படுத்துமானால், கள்ளக் கணக்குக்கு அது துணைசெய்யும். இன்று நம்முடைய நாட்டில் ‘கறுப்புப்பணம்’ என்ற பேச்சு அடிக்கடி அடிபடுகிறது. ஏன்? அரசின் வரிவிதிப்புக் கொள்கைகளாலும், தனிமனித உடைமையில் அரசு அலட்சியம் காட்டுவதாலும், நாடு, முழு உத்தரவாதமுள்ள ஓர் அரசைப்