பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/337

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசியல்



333


போலவே தம் தவறுகளை மற்றவர் இடித்து எடுத்துக் காட்டும் பொழுதும் ஏற்றுத் திருத்திக் கொள்ளும் இயல்பினைப் பெறவேண்டும். சீன நாட்டுத் தத்துவஞானி கன்பூசியஸ், “கீழே விழுதல் குற்றமன்று. ஆனால், அப்படியே விழுந்து கிடப்பதும், திரும்பத் திரும்ப வீழ்தலும் அறியாமை” என்றார். அதுபோல அரசுக் கட்டிலில் அமர்ந்திருப்போர் தம்மை நச்சி இச்சை பேசிப் புகழ்வாரை மட்டுமே துணையாகக் கொள்ளக்கூடாது. அத்தகைய துணையைப் பெறுபவர் பகைவரின்றியே அழிவர். அரசாள்வோர் தம் குறையை இடித்துக் காட்டுபவரைத் துணையாகப் பெற்றாலே என்றும் எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பர்.

‘இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.’

447

என்பது வள்ளுவர் வாக்கு. ஆம்! அதிகமான செல்வமோ, அரசுக் கட்டிலோ வந்துற்றபோது இச்சை முகம் காட்டி நயப்புறப் பேசுவோர் வந்து சூழ்வர். புகழ்ப் போதை ஏற்றுவர். அந்த மயக்கக் கிறுக்கில் மதி நலம் கெடும். அதுபோது யாரேனும் ஒருவர் தம்மையோ-தம் செயலையோ முறையன்று என்று மறுத்தால் ஆராய மனமிருக்காது. சொல்பவர் மீது சினம் தோன்றும். அழுக்காற்றால் - ஆணவத்தால் குற்றம் சொல்கிறான் என்று கருதி முடிவெடுக்கத் தோன்றும். அதுமட்டுமா? அந்த நல்ல மனிதரை அழிக்கவும் மனம் ஒருப்படும். அதனாலன்றோ ‘தம் புகழ் கேட்க நாண வேண்டும்’ என்று சங்ககாலச் சான்றோர் கூறினர்.

வள்ளுவர், ‘செவிகைப்பச் சொற் பொறுக்கவேண்டும்’ என்கிறார். வாய்ச் சுவையிலும் கூட இனிப்பு மட்டுமே இன்பம் தருவது அல்ல. கைப்பாக இருக்கும் பாகற்காய்க்கு ஈடு எது? கசக்கும் வேப்பங் கொழுந்துக்கு விஞ்சிய மருந்து ஏது? செவிக்கு இன்சுவைதரும் புகழ்ச் சொற்களை மட்டுமே