பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/338

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கேட்க விரும்பக் கூடாது. சொற்களின் சுவையை விடச் சொற்களால் விளையும் பயனே சிறப்புடையது; நலம் தருவது.

‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு’

389

என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் காட்டும் அரசு நீதியை வழங்கும் அரசு; நீதி தழுவிய சமுதாயத்தை அமைக்கும் அரசு. நீதி, உயர்ந்தது. ஆனால், உலகியலின் இன்றியமையாத் தேவையாகிய பொருளியல் முறை மாறுபடும் பொழுது, நீதி கெடும்; செங்கோல் நடைபெறுவதற்கு இயலாது. ஆதலால் திருவள்ளுவர், தாம் படைத்த அரசியலில், பொருளியல் முறை வைப்பையும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த இருபதாம் நூற்றாண்டின் சேம நல அரசு என்று கூறிக் கொள்ளும் அரசில் கூடத் திருவள்ளுவர் காட்டுகின்ற அரசின் பொருளியல் முறை செப்பமாக அமையவில்லை. அரசு, ஒரே வழியில் அதாவது மக்களிடத்திலிருந்து வரி தண்டுதல் வாயிலாக வரும் வருவாயை மட்டுமே நம்பியிருத்தல் கூடாது. பொருள் வருவதற்குரிய புதுப்புது வழிகளைத் திட்டமிட்டுக் காணுதல் வேண்டும். அந்த வழிகளில் அரசு விழிப்பாகப் பொருளையீட்ட வேண்டும். அரசு தாம் ஈட்டும் பொருளை, ஈட்டும் பொழுதே சில்லறையாகச் செலவிடுதல் கூடாது. ஈட்டப்படும் பொருள் பலருக்குப் பயன்தரத் தக்கவாறு வளரும் வரை காத்து வைக்கப் படவேண்டும். அதன்பின் அப்பொருளை, யார் யாருக்கு, எந்தெந்த வகையில் பயன்பட வேண்டும் என்று தெளிவாகத் திட்டமிட்டு வகுத்தும் வழங்க வேண்டும். இந்த அருமையான பொருளியல் கருத்து, திருவள்ளுவருடைய மூதறிவில் பிறந்த சிந்தனை. இன்றைய இந்திய அரசியலில் வள்ளுவர் காட்டிய ‘வகுத்தல்’ முறையில் தான் கேடு இருக்கிறதென்று அரசியல் - பொருளியல் அறிஞர்கள்