பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/342

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வகை எழுத்துக்களுக்கும் அடிப்படையாகவும் உள் நின்று ஒலிக்கும் ஒலியாகவும் விளங்குவது ‘அ’ என்ற உயிர் எழுத்து. ‘அ’ என்ற எழுத்தின் அடிப்படையும் ஒலிக் கலப்பும் இல்லாது எந்த எழுத்துக்கும் ஒலி வடிவமும் இல்லை; வரி வடிவமும் இல்லை.

ஆயினும் எல்லா எழுத்தொலிகளிலும் அகரம் இருப்பது வெளிப்படையாகத் தெரியாது; கேட்காது. இவ்வுண்மையை இலக்கண நுண்ணறிவோடு கூர்ந்து நோக்கினால் தெரியும். இந்தக் காட்சியைக் கடவுட் காட்சிக்கு ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். காணப்படும் உலகம் ‘அவன், அவள், அது’ என்று மூன்று நிலையினதாக இயங்குகிறது. மூன்று நிலையினதாக இயங்கும் இவ்வுலகத்திற்கு முதலாக-இயக்கும் ஆற்றலாக ஒன்றாகியும் உடனாகியும் வேறாகியும் நின்று, இயக்கும் ஆற்றலாகக் கடவுள் இருக்கிறார்.

என்பது திருவள்ளுவர் கருத்து.

காணும் காட்சியின் வாயிலாகக் காணாதனவற்றையும் காண்டதுதான் அறிவுடைமை. ஆதலால், இவ்வுலக இயக்கத்திற்கு இறைவன் முதலாக இயக்கும் ஆற்றலாக இருக்கிறான் என்பது பொருள்.

உலக இயக்கத்திற்கு அடிப்படையாக இருக்கும் கடவுளுக்கு ஆற்றல் மிகுதியும் தேவை. தமிழகச் சமய வரலாற்றில் கடவுளை, அம்மையப்பனாகப் போற்றி வழிபடுதல் மரபு. அம்மையப்பன் வழிபாடு என்பது பொருள், பொருளின் ஆற்றல் என்று பகுத்துக் கண்டுணர்ந்து வழிபடுதலாகும். பொருள் சிவம்; ஆற்றல் அம்மை. ஆதி சக்தியைப் பங்கில் உடையவன் என்பது பொருள். உலகத்திற்கு முதலாக இருப்பவன் அம்மையப்பன்.

எழுத்துக்கள் தோன்றுவதற்குக் காரணமாயிருக்கிற ஒலிக்கு முதற்காரணம் நாதம். இந்த நாதம் தோற்றக்களத்தில்