பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/350

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நூல். ஆனால் உலகப் பொதுச் சமயநூல்; சமயங்களைக் கடந்த பொதுநெறி நூல். திருக்குறள் மானுடத்தின் வெற்றியைக் குறிக்கோளாக உடையது. திருவள்ளுவத்தின் வழி வையகம் இயங்கும் போது இன்பம் மலரும்; துன்பம் நீங்கும்.

திருக்குறள் தமிழிலே தோன்றியிருந்தும் தமிழர்களின் வாழ்வியல் திருக்குறள் வழியதாக அமையவில்லை. பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்டோ, ரூசோ, சோவியத் புரட்சிக்கு வித்திட்ட லெனின் ஆகிய மாமேதைகளுக்குத் திருவள்ளுவர் ஒப்பானவர்; காலத்தால் நோக்க உயர்ந்தவர். திருக்குறள் காட்டும் சமுதாய அமைப்பில் உயர்வு தாழ்வு இல்லை. ஆயினும் இன்றைய தமிழகத்தில் வாழும் நெறி எப்படி இருக்கிறது? வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் தடுமாற்றங்கள்! முறை பிறழ்வுகள்! ஒரு கடவுள் வழிபாடு இல்லை! பல நூறு ஆண்டுகளாகக் கடிந்து ஒதுக்கப் பெற்ற சிறு தெய்வ வழிபாடுகள் இன்னும் மறைந்தபாடில்லை.

மேட்டுக்குடி மதத்தலைவர்கள் சாதிமுறைகளைப் பத்திரமாகப் பாதுகாக்கச் சிறுதெய்வ வழிபாடுகளை ஊக்கப்படுத்துகின்றனர். வாலறிவு-ஞானம் வளர்வதற்குத் தடையாகச் சடங்குகளிலேயே மக்களை ஈடுபடுத்தி அலைக் கழிவு செய்கின்றனர்; ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று பெரு நெறிகாட்டிய தமிழ் நாட்டில் எண்ணத் தொலையாத சாதிகள்! இன, மத வேற்றுமைகள்! பிரிவினைகள்! பகைமை வழிப்பட்ட மோதல்கள்! அவ்வழியிலாகிய அழுக்காறு! இவை அகன்ற பாடில்லை. ‘இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு’ என்று திருவள்ளுவர் வருந்திக் கோடிட்டுக் காட்டிய வறுமை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. ஏன்? அன்பினால் இணைக்கப்பெற்று ஒருமையுணர்வுடன் வாழ வேண்டிய உயிர்க்குலம் உட்பகையால் உள்ளீடு அழிந்துவருகிறது. இந்த