பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/366

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருள்

வெகுளி, அறிவையும் உணர்வையும் ஆள்வினைத் திறனையும் கெடுக்கும். முயற்சிக்குத் துணையாயிருப் போரைரும் பகைவராக்கிவிடும். ஆதலால், எண்ணியதை இனிதே நிறைவேற்ற நினைப்போர் மனத்தாலும் வெகுளக் கூடாது.

36. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

317

யார்க்கும், எப்போதும், ஒரு சிறிதும் மனத்தினால் தீமை செய்யாதிருப்பதே தலையாய அறம் ஆகும்.

பொருள்

அறம், செய்யப்படுவதன்று: ஒழுகப்படுவது. எந்தச் சூழ்நிலையிலும் பகை-உறவு வேறுபாடின்றி எவருக்கும் எத்தகைய துன்பத்தையும் செய்யாதிருப்பதே தலையாய அறம் ஆகும்.

37. பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

322

பசித் உயிர்களோடு உணவினைப் பங்கிட்டு உண்பதன் மூலம் பல உயிர்களையும் பாதுகாக்கும் அறம், நூல்கள் பலவாகச் சொன்ன அறங்களுக்கெல்லாம் தலையாயது.

பொருள்

பசித்த உயிர்க்கு உணவளிக்காமல் அதனைச் சாகவிடுதல் கொலைக் குற்றமாகும். எனவே இது கொல்லாமை அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

38. நாள்என ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வான துணர்வார்ப் பெறின்.

334