பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/383

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள் நூறு



379



வில்லின் வணக்கம் ஏற்றவர்க்குத் தீமையே செய்யும். பகைவரின் சொல் வணக்கமும் தீமை தருதலையே குறிக்கும்.

பொருள்

பகைவர் மனத்தினால் வணங்குதல் இல்லை. சொல்லினால் வணங்குதல் தீமைசெய்யும் குறிப்புடையதே என்பதை அறிக.

88. பேதமை என்பதொன் றியாதெனின் ஏதம்கொண்
டூதியம் போக விடல்.

831

அறியாமை என்பது யாதெனில் தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு செல்வம் வருவனவற்றைக் கைவிடுதல்.

பொருள்

அறியாமை என்பது அழிவைத் தழுவிக்கொண்டு, ஆக்கத்தை இழத்தல்.

89. வெண்மை எனப்படுவது யாதெனில் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

844

தம்மைத் தாமே நல்லறிவுடையேம் என்று செருக்கிக் கொள்ளுதல் புல்லறிவாண்மை யாகும்.

பொருள்

அறிவு வளர்தலுக்குரியது; ஆதலின், அறிவு உடையோம் என்று எண்ணுதல் தவறு.

90. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

852

ஒருவன் தன்னோடு கூடாமையைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும், அவனோடு மாறுபட்டு அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் சிறந்தது.