பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/384

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பொருள்

கூடாதவரைக் கூடும்படி செய்தலே நல்வாழ்க்கை. அஃதின்றிப் பகைகாட்டித் துன்பம் செய்தால் பகை வளரும்; அவ்வழி அழிவு வரும்.

91. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு.

874

தமது பகையைத் தணித்து நட்பாகக் கொண்டொழுகும் பண்புடையாளரின் பெருந்தன்மைக்கண் உலகம் அடங்கும்.

பொருள்

பகையை நட்பாக மாற்றிக் கொள்ளுதல் பண்பு நெறி.

92. வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

882

வாள் போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், உறவினரைப் போல இருந்து மறைந்து பகை செய்பவரைக் கண்டு அஞ்சுக.

பொருள்

முகத்தில் உறவும் அகத்தில் பகையும் உடையாரை அஞ்சி விலகிடுக.

93. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

891

எடுத்துக் கொண்ட பணிகளை இனிதே முடிக்க வல்லாரின் ஆற்றலை இகழாதிருத்தல் தலையாய காப்பாகும்.