பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



35


என்பது அவர் தம் வாழ்க்கைத் தேவைகளைப் பெறுதற்குரிய வாயில்களை அமைத்துத் தருதல்.

சுற்றம் பழகும் பழக்கங்களால், வழக்கங்களால் அகவுணர்வுகள் செழுமையாக வளர்ந்து பயன் தருவது. அதனால், அடிக்கடி கண்டும் கலந்தும் மகிழ்ந்து உரையாடியும், கலந்து உண்டும், மகிழ்ந்து விளையாடியும், உதவிகள் செய்தும், உதவிகள் பெற்றும் உறவு நிலைகளைப் பேணுதல் இன்றியமையாதது. உறவுகள் செழிப்பாக அமையாத சுற்றம் சுமையாகிவிடும்.

5) தான்: தலைவன். அவன் இல்வாழ்க்கையின் குடும்பத்தின் ஆக்க நிலையில் அமைந்த உறுப்பு. ஆதலால், அவனும் தன்னைக் காலத்தில் உண்ணுதல், உடல்நலத்திற் குரிய உழைப்புகளை மேற்கொள்ளல், நல்ல நூல்களைக் கற்று அறிஞனாக விளங்குதல், அன்பு நலத்தை வளர்த்துக் கொள்ளற்குரிய வாயில்களைப் பெறுதல் - அமைத்தல் ஆகியவை வழி பேணிக்கொள்ளுதல் இன்றியமையாதது.

‘பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.’

44

மற்றவர்களால் பழிக்கப்படும் தீய செயல்களைச் செய்ய அஞ்சி வாழ்தல் வேண்டும். இவை இரண்டு வகையின.

1. பழித்தற்குரிய தீய செயல்களைச் செய்யாது தவிர்த்தல்.

2. இல்வாழ்க்கைக்குரிய செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாது விடுதல் வாயிலாகப் பழிவருதல்.

ஆதலால் மனை வாழ்க்கை சிறப்புறுதலுக்குரியன செய்க. செய்யத் தகாதன செய்யற்க.

பழியஞ்சுதல்:

1. தம்மைச் சார்ந்தோரும் சுற்றத்தாரும் வருந்தத் தாம் மகிழ்ந்து வாழாமை.