பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


2. தாம் மகிழ்ந்து இனிது வாழ்வதற்காக மற்றவர்களை வருத்தாமை.

3. தாம் வளர்த்து மேம்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டிய மக்களைப் பேணும் பணியில் சோர்விலாதிருத்தல்.

4. தன்னயப்புகளால் குமுகாயப் பொது அறங்களைச் செய்தலில் அயர்தல் அல்லது செய்யாது விடாமை.

பாத்தூண்:

உணவு பகுத்துண்டல் பண்பாடுகளின் களன். பகுத்து உண்ணலால் அன்புக் கிளர்ச்சிகளும் மனமகிழ்வும் தோன்றும். அவ்வழி வாழ்க்கை செழிக்கும்.

1. குடும்பத்திற்கு உரியார் அனைவரும் விருந்தினர் உண்டாயின் அவரும், சுற்றத்தார் இருப்பாராயின் அவரும், உடனிருந்து பகுத்து, மற்றவர் விருப்பம் அறிந்து வழங்கி உண்பித்து, உண்டு வாழும் வாழ்க்கையை உடையார் தலை முறை தலை முறையாக வளர்வர்.

‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’.

45

அன்பும் அறனும் உடையதாக அமைந்த இல்வாழ்க்கை பண்பாகவும் அப்பண்பின் பயனாகவும் விளங்கும்.

அன்பு:

இல்வாழ்க்கை அன்பு விளைவிக்கும் பண்ணை. அன்பு செய்தலே முன்னுரிமை. அவ்வழிதான் அன்பு பெறுதல் இயலும். தன்னை நடுவமாகக் கொண்ட வாழ்க்கையில் அன்பு செழிக்காது. மற்றவர்களை நடுவமாகக் கொண்ட வாழ்க்கையில் அன்பு செழிக்கும்.