பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



37


இல்வாழ்க்கையிலும் பழுத்த துறவு வேண்டும். தாம் துய்த்தற்காக அல்லாது, துய்த்தற்குத் தருதலும் அவ்வழியில் மற்றவர் துய்ப்பு இடையீடின்றி நிகழத் தான் துய்த்தலும் தவிர்க்க முடியாத வழித் துய்த்தலுமே அன்பின் செயல்கள். இத்தகைய அன்பின் விளை நிலமாக இல்வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும். இத்தகு அன்பில் மனத் தூய்மையும் அவ்வழி நிகழும் செயல்களும் அறமாகும்.

1. வாழ்க்கைத் துணை நலமாக அமைந்த மனைவிக்காக, அன்பு காட்டும் அவளுக்காக வாழ்க! மக்களிடமும் சுற்றத்திடமும் அன்பு காட்டுக.

2. அறம்: வாழ்வாங்கு வாழ்தல்; வாழ்வித்து வாழ்தல்.

‘அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவது எவன்.’

46

அறநெறியில் இல்வாழ்க்கையில் பெறாத எதனைப் புறநெறிகளில் போய்ப் பெறமுடியும்?

முற்கூறிய அறநெறியில் இல்வாழ்க்கையைச் சிறப்புற நடத்தினாலே இம்மை, மறுமை நலன்களை அடையலாம். இல்வாழ்க்கையில் பெற முடியாத எந்த ஒன்றையும் துறவு நெறியில் பெற்றுவிட முடியாது.

நின்றொழுகும் நெறிகள் விருப்பத்தின்பாற் பட்டனவேயாம். இரு நெறிகளிலுமே வாழ்க்கை நலன்களையும் திருவருளின்பத்தையும் பெறலாம்.

‘இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.’

47

இல்வாழ்க்கைக்குரிய இயல்புகளுடன் கூடி வாழ்பவன், வாழ்க்கையை வெற்றிகரமாக - இன்பமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்வார் எல்லாருள்ளும் தலைவன் ஆவான்.