பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



41



‘மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.’

51

மனையறத்திற்குத் தக்க மாட்சிமைக்குரிய பண்புகளை உடையவளாக விளங்கி, தலைமகனின் வருவாய்க்குத் தக்கவாறு குடும்பத்தை அமைத்துத் துணையாய் அமைபவள் வாழ்க்கைத் துணை.

1. மனையறத்துக் குரிய பண்புகளுள் முதன்மையானது இன்புறு காதல் வாழ்க்கை நிகழ்த்துதல்.

2. மனையறத்துக்குரிய தன்னுடைய தலைவனை முறையாக வளர்த்தல்.

3. இருவர் கூடி முழுமையான வாழ்க்கை வாழ்தல் எளிமையான ஒன்றன்று. அத்தகு முழுமையான வாழ்க்கை வாழ்தலே முழுமையான வாழ்க்கை - வெறுப்பு, துன்பம், பழி வராத வாழ்க்கை.

4. வளத்தக்காள்: தலைமகன் பொருள் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவான். அப்பொருள் வந்து சேரவேண்டிய கருவூலம் வாழ்க்கைத் துணையே. இல்வாழ்க்கையில் பொருட் செல்வப் பொறுப்புடையவள் வாழ்க்கைத் துணைவியேயாம். அவள் பொருட் செல்வத்தை முறையாகப் பங்கீடு செய்து தலைமகளின் - குடும்பத்தின் பொறுப்புகளை நிறைவேற்றி, எதிர் காலச் சேமிப்பும் வைக்கவேண்டும்.

‘மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.’

52

வாழ்க்கைத் துணையாய் அமைந்தவளுக்கு மனையறத்திற்குரிய சிறப்புடைய பண்புகள் இல்லையாயின் ஒருவன் வாழ்க்கை, செல்வம் முதலிய வேறு வகைகளில் சிறப்புடைய தாய் அமைந்திருப்பினும் அச்சிறப்புகளால் பயன் இல்லை.