பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



49


‘பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.’

58

சிறந்த இல்லாளை ஒருவன் பெறுவானாயின் அவன் புத்தேளிர் உலகத்தைப் பெறுவான்.

ஒருவன் வீட்டின்பத்தை அடைய சிறந்த இல்லாள் துணை செய்ய முடியும் என்பதாம்.

‘புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை; இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.’

59

புகழுக்குரியவாறு வாழும் இல்லாளைப் பெறாதார் தம்மை இகழ்வார் முன் பெருமையுடன் நடந்துகொள்ள முடியாது.

தனது கற்பின் திறத்தாலும் சீராகக் குடும்பத்தை நடத்துதலால் செல்வ வளம் காத்தலாலும், உயர் அன்பின் காதலிற் களித்து இன்புறுதலாலும் கணவனைத் தன்பால் ஈர்த்து அவனையும் கற்பொழுக்கத்தில் நிலை நிறுத்தி இருப்பதனாலும், மனையறத் தவத்தில் நன்மக்களைப் பெற்று முறையாக வளர்ப்பதாலும் கணவனுடைய - மனையறத்தினுடைய யாதொரு கடமையும் தவறாது செய்தாலும் குமுகாயத்தின் முன் தன் கணவன் புகழும் - பெருமையும் உடையவனாக மற்றவர் மதிக்கச் செய்தல்.

இங்ஙனம் சீராக வாழாத இல்லாளைப் பெற்றவனுக்குப் புகழ் இல்லையென்பதாம்.

‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.’

60

ஒருவனுக்கு நன்மையா யமைவது இல்லாள்; சிறந்த இல்லாள். அதற்கு மேலும் அணி செய்வது நன் மக்களைப் பெற்றெடுத்தலேயாம்.

தி.iv.4