பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


1. இல்லாளைப் பெருமைக் குரியவளாக அமைத்துக் கொண்டும் வளர்த்தும், பேணுவதே கணவனின் கடமை.

2. நன் மக்கள்: பால் வேறுபாடுகளின் சேர்க்கைவழி மக்கட்பேறு தோன்றுதல் இயற்கை. மனைமாட்சி சிறப்புறுவது நன் மக்கட் பேற்றால்! நன்மக்களைப் பெறுதல் எளிதன்று, இதற்குத் தலைவனும் தலைவியும் ஒத்த அன்பினராகி உயர்தவமுடையவராகி அன்பிற் கலத்தல் வேண்டும்.

3. கூடுதலில் உடல்நிலை மறந்து உயிர்களின் உணர்வு கலத்தல் வேண்டும்.

4. உடற்பசி இழிநிலைக் காமம். உயிர்ப்பசி காதல்.

5. கூடிக் கலந்து மகிழும் நாளில் நீராடி நற்சிந்தனைகளைச் சிந்தித்து எண்ணிக் கூடுதல் வேண்டும்.

6. கூடும் நேரத்தில் காமச்சூடு இருத்தல் கூடாது.

7. மக்கட்பேறு

காதல் மனையற வாழ்க்கை மக்கட் பேற்றை நோக்கமாக உடையது. எந்தவோர் உயிரினத்திற்கும் தம்மினம் இடையீடின்றித் தழைத்து வளரவேண்டும் என்ற ஆவல் இயற்கையாக உண்டு.

மனையறத்தின் பயன் மக்கட் பேறேயாம். மக்களைப் பெறுதல் மூலம் குடும்பம் தொடர்ந்து வளர்ந்து வாழ்கிறது. குமுகாயம் தொடர்ந்து பெருகி வளர்கிறது. ஆதலால் மக்கட் பேறு சிறப்புடையது.

'பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.’

61