பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



55


அவனுடைய பணிகளால் பயன் பெற்றோர் “சான்றோன்” எனப் பாராட்டி வாழ்த்திப் புகழ்ந்து கூறும் பொழுது மகிழ்ச்சி கொள்க.

அங்ஙனமில்லாது மகன் என்ற அளவில் மகிழ்ச்சி அடைந்தால் சிறப்பில்லை; புகழும் தராது. பிறர் சொல்லக் கேட்பதே புகழ். அதனை விரும்புக.

‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.’

70

மகன் தந்தைக்குச் செய்யக்கூடிய உதவி “இவன் தந்தை என்ன நல்வினை செய்தான்னோ இந்த நல்வினையாளனைப் பெறுதற்கு” என்று பாராட்டத் தக்கவாறு வாழ்தலேயாம், என்னோற்றான் கொல் எனும் சொல்.

1. பெற்றோர் தம் முதிய காலத்தில் மக்களின் பொருளாதாரத்தை நம்பி வாழ்தல் நன்றன்று; சிறப்பும் தராது. பெற்றோரை முதுமைக்காலத்தில் காப்பாற்றுவது என்பது மகனின் அறவழிப்பட்ட கடமையே. ஆனால் உலகியலில் அது சிறப்பதில்லை. கூடுமானவரை தவிர்த்தல் நல்லது.

2. தம் மகன் நல்ல செயல்களைச் செய்து அவ்வழிவரும் புகழில் மகிழவேண்டுமேயன்றி, தம் மக்களிடம் உள்ள பொருள்களில் மகிழ்தல் நன்றன்று. ஆனாலும் மகிழக் கூடாது என்பதன்று.

3. ஒரு குடும்பத்தின் வளர்ச்சியைத் தந்தைக்குத் தந்த பொருளிலிருந்து அளந்து மதிப்பிட்டுப் பாராட்டுதல் வளர்ச்சியின் அடையாளமன்று. மக்களின் சிறப்பை அளவு கருவியாகக் கொண்டே தந்தையின் சிறப்பை அளந்தறிவர். ஆதலால் நன்மக்களைப் பெறுதலிலும் பெற்ற மக்களை முறையாக வளர்ப்பதிலும் பெரிதும் அக்கறை காட்டுதல்.