பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



8. அன்புடைமை

இல்லறத்தின் கடமைகளை முறையே செய்யவும், உணர்வுகள் குடும்பம் என்ற குறுகிய நிலையில் தங்கி விடாமல் பரந்த குமுகாய அளவிற்கு விரிவடையவும் தேவை அன்பு. அன்பு என்பது ஒருவரைக் கண்டுழியும், காணா வழியும் அவர்மாட்டு நமது பரிவு நிறைந்த உணர்வுகளைச் செலுத்தி நலமறிய நாடல்; நலம் பேண உதவுதல் முதலியன நிகழ்வதற்குக் காரணமாய் அகத்தே நிகழும் ஓர் உணர்வு.

‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.’

71

அன்பினைக் காட்டாது தடுக்கத் தாழ்ப்பாளும் உண்டோ? இல்லை! தம்மால் அன்பு செய்யப் பெற்றாரது துன்பங் கண்டபோது அன்புடையாரின் கண்கள் நீரைச் சிந்தும். அக்கண்ணீர்வழி அன்புடைமையை அறியலாம்.

அன்புடைமை செயல்களில் மட்டும் வெளிப்படுவதன்று; உணர்தலிலேயே வெளிப்படுவதாகும்.

அன்பு என்பது ஒரு சடங்கன்று. ஒப்புக்குக் காட்டுவன வெல்லாம் அன்பல்ல. உண்மையிலேயே மற்றவர்களிடம் அன்போடு பழகுக. அவர்தம் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதுக. அதுவே அன்புடைமையின் சிறப்பு

‘அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.’

72

அன்பிலார் எல்லாவற்றையும் தமக்கே உரிமையாக்கிப் பயன்படுத்துவர். அன்புடையார் தம்மை மற்றவர்க்கு உரிமையாக்குவர்.

1. "தமக்கே உரியராகும்” தனி உடைமை நஞ்சு, அன்பின்மையால் வருவது; வளர்வது. "என்பும் உரியர் பிறர்க்கு” - பொதுவுடைமை உணர்வு வருவது; வளர்வது.