பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



61


அம்மரம் வளரவேண்டிய நிலப்பரப்பிலும் நீர்வளம் இருக்க வேண்டும். அதுபோலத் தனி மாந்தனிடத்தில் அன்பு உணர்வும், அந்த அன்பு உணர்வை வளர்த்துப் பாதுகாக்கக் கூடிய அன்புடைய குமுகாய அமைப்பும் இருக்கவேண்டும்.

i. ஆதலால், உள்ளத்தில் அன்பினைப் பெறுக. உள்ளவாறு அன்புடையராக ஒழுகுக. அன்புடைய குமுகாய அமைப்பைக் காண்க.

2. தனி மாந்தனை அன்பினில் வளர்க்கக் கூடிய குமுகாய அமைப்பினைக் காணுக.

3. உள்ளத்தில் அன்பினைக் கண்டு வளர்த்துக் கொள்ளக் குமுகாய அமைப்புத் தேவை என்ற உணர்வோடு குமுகாயத்தை அணுகிக் கலந்து குமுகாயத்தில் ஓர் உறுப்பினராகுக.

‘புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.’

79

புறத்தே காணப்படுவனவாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய உறுப்புகள் மாந்த உயிரின் உள் உறுப்பாகிய அன்பு இல்வழிப் பயன்படா; பயனற்றவை.

ஒருவருடைய வாழ்க்கையின் வெற்றிச் சிறப்புக்குரிய இடம், பொருள், ஏவல் முதலியன சிறப்பாக அமைந்திருந்தாலும் அந்த ஒருவருடைய உயிரில் அன்பு என்ற பண்பு இல்லாது போயின் பயனற்றவையாகிவிடுகின்றன.

1. பொறிகள். அன்பைப் பெறுதலுக்கும், தருதலுக்கும், அவ்வழி வாழ்க்கையின் சிறப்புக்குரியனவாதற்கும் வாயில்கள்.

உள்ளத்தில் அன்பு இல்லையேல் கண்கள் பேசா. வாய் பேசாது. இந்நிலையில் வாழ்வியல் நடைபெறாது. ஆதலால் அக நிலையில் அன்பை வளர்த்து, பொறிகளின் வாயிலாக வெளிப்படுத்துக.