பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



6. நமக்குத் தீமை செய்தவரை மனத்துட் கொள்ளாமைக்குச் சான்று, அவர்க்கு நன்மை செய்தலேயாம். ஆனால், தீமை வழியினால் அனுபவித்த துன்பம் நெஞ்சத்தை உறுத்திக்கொண்டே யிருக்கும். அந்த உறுத்தலிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நமக்கு ஏற்பட்ட துன்பம் நமது அறியாமையினாலோ, ஊழின் வயத்தாலோ வந்தமைந்தது என்று நினைத்து அமைதி கொள்வது தீமையை மறத்தற்குத் துணை செய்யும் பழக்கம்.

‘கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.’

109

நமக்கு முன்பு நன்மையைச் செய்தவர், பின்பு கொன்றாற் போன்ற பெருந்தீங்குகளைச் செய்தாராயினும் அத்துன்பமெல்லாம் அவர் செய்த யாதானும் ஒரு நன்மையை நினைந்த அளவில் நீங்கும். அவர் துன்பம் செய்கிறார் என்ற நினைப்பும் நீங்கும்.

1. நமக்கு, ஒருவர்-பழகிய அன்புடன் பலகாலும் நன்மை செய்தவர் நல்லூழின்மையால் அறிந்தோ அறியாமலோ கொலையனைய துன்பத்தைச் செய்தாராயினும் அவர்மீது சினம் கொள்ளக்கூடாது.

2. அத்துன்பத்தை அனுபவிக்கும் பொழுது அவர் மாட்டுத் தோன்றும் சினத்தைத் தவிர்க்க அவர் முன்பு செய்த நன்மைகளில் யாதானும் ஒன்றை நினைந்து மகிழ முயன்றால் அத்துன்பமும் நீங்கும். துன்பம் செய்வாரிடத்துத் தோன்றும் சினமும் நீங்கும்.

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.’

110