பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



79



எத்துணைப் பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும் கழுவாய் உண்டு. ஆயினும் ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்தவர்க்குக் கழுவாயே இல்லை.

ஒருவர்க்கு உதவி செய்தல் அறம் என்றே போற்றப்பெறுகிறது. அதுபோலவே ஒருவர்க்குக் கிடைக்கும் உதவியைத் தடுக்காதிருத்தலும் அறமேயாம்.

1. எந்த ஓர் அறத்தையும் கெடுத்தல் கூடாது. ஆயினும் சில அறங்களைக் கெடுத்தார்க்குக் கழுவாய் உண்டு என்று அறநூல் கூறும். மருந்து உண்டு என்பதற்காக நோயை வரவழைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் என்ன? ஆதலால், எந்த சூழ்நிலையிலும் அறங்களைக் கெடுக்காது வாழ்தலே சிறப்பு.

2. அறங்களிலெல்லாம் தலையாயது உதவி செய்தல் என்ற அறம். உயிரினங்கள் தம்முள் ஒத்து உதவி செய்து கொள்ளும் இயல்பினாலேயே உலகியல் நடைபெறுகிறது. இந்த உலகியல் இடையீடின்றி நடைபெற வேண்டுமானால் உதவிகளைப் பாராட்டுதலும் உதவியாக இருந்தவைகளை - இருந்தவர்களைப் பேணிப் பாதுகாத்தலும் அறம். இந்தப் பேரறத்தைச் செய்யா தொழுகின் உலகியல் தடைப்படும். அதனால், கழுவாய் இல்லை என்றார். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் ஒருவர் செய்த உதவியை மறப்பதைத் தவிர்த்திடுக.

3. மறவாதிருப்பதற்குரிய பயிற்சி, திரும்பத் திரும்ப உதவி செய்தவர்களை நினைந்து பாராட்டுவதுதான். இங்ஙனம் உதவி செய்தவர்களை நினைந்து பாராட்டுவதால் அவர்களுடைய உதவி செய்யும் பண்பும் மேலும் வளரும்.