பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




11


கவிதை விளக்கம்


உழைக்கும் சக்தி படைத்த ஆடவர்களின் முயற்சியினைப் பொறுத்தே நாட்டுவளம் அமைகிறது. ஆடவர் உலகம் அயராத, ஆர்வம் நிறைந்த முயற்சியினை மேற்கொண்டு பெரும்பொருள் ஈட்ட வேண்டும். “வினையே ஆடவர்க்கு உயிரே” என்பது தமிழ் இலக்கிய மரபு. இங்ஙனம் அறத்தாற்றில் பெரும் பொருள் ஈட்டுவது, தானே துய்ப்பதற்காக அல்ல. “செல்வத்தின் பயனே ஈதல்” என்று புறநானூறு பேசுகிறது. ஏன்? பொருள் ஈட்டுகிற முயற்சியில் ஈடுபடுகிறதே மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்வதற்குத்தான் என்ற கருத்து தமிழ் இலக்கியங்களில் பரக்கக் காணப்படுகிறது. இக்கருத்தை கீழ்க்கண்ட அகநானூற்றுப் பாடலின் அடிகள் தெளிவாக விளக்குகின்றன. தலைவன் திருமணச் சிலவிற் குரிய பொருளீட்டுதல் குறித்துப் பிரிந்து செல்லுகின்றான். அவன் திரும்பி வருவதாக குறித்துச் சென்ற காலத்தில் வரவில்லை. அது குறித்து தலைவி இரங்குகின்றாள். தோழி தேற்றுகிறாள். தேறுதல் உரை சொன்ன தோழிக்குத் தலைவி பதில் கூறுகிறாள், “அறியாய் வாழிதோழி” என்று தொடங்குகின்ற கவிதையின் ஈற்றடிகள் நினைவு கூரத்தக்கன.