பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”

என்று திருக்குறள் கூறும்.

நாளும் வாழும் வாழ்க்கையில் உயிர் மனத்துய்மை இழத்தலும், இழுக்குறுதலும் தவிர்க்க முடியாதது. புவியீர்ப்பு ஆற்றல் தன்பால் பொருள்களை ஈர்ப்பது போல, உயிரைக் கீழ் நோக்கிய இயல்புகளில் இழுக்கும் ஆற்றல், பொருந்தா உலகியலுக்கும் உண்டு. அதனால் மனத்தூய்மை கேடுறும். ஆதலால் நாள்தோறும் நாம் மனத்துய்மை பெறுதல் வாழ்தலுக்குரிய கடமைகளுள் ஒன்று.

துய்மை எளிதில் வராது. மனத்துய்மை பெறுதற்குரிய வாயில்களை நாடி அவற்றைச் செய்தல் வேண்டும். மனத் தூய்மை பெறுதலுக்குரிய சிறந்த வாயில் மற்றவர்களிடத்தில் அன்பு காட்டுதல்; அவர்கள் வாழ்வதற்குரியன செய்தல்; அவர்கள் மகிழ்தலுக்குரியன செய்தல். அவற்றையும் நன்றி, பாராட்டு, புகழ் முதலியன பெறும் வேட்கையின்றிச் செய்தல்; பயன் பெறுவார் இகழ்ந்து வெறுத்தாலும் பொறுத்துக் கொண்டு செய்தல் அறம்.

புகழை விரும்பிச் செய்யும் செயல்கள் மனத் தூய்மையைத் தரா. ஏன்? புகழ் விருப்பம் போதையை விடக் கொடியது. மேலும் மேலும் பெற விரும்பும்படி காமுறுத்துவது புகழ்.

அதனால் காலப் போக்கில் அறத்தின் நோக்கம் மாறி, செய்வன அறமாக இல்லாமல் போகும். செய்யப்படுவோர் பயன்படுதலுக்குரியர் என்று, புகழ்வோருக்கு வரையறையின்றிச் செய்யும் மனப்பாங்கே தோன்றும். அப்போது புகழ்வோரே பயன்பெறுவர். வறியோர்-உரியோர் பயன் பெற மாட்டார்கள்.

தூய்மை, துறவு, தொண்டு இவைதாம் உலகத்தில் அழுக்காற்றின் வழியில் சிக்கிப் போட்டிகளுக்கு ஆளாகாதவை.