பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

131


முரண்பாடின்றிச் செயற்படலாம். சில சமயங்களில் ஒன்றுக் கொன்று முரண்பாடும் இருக்கும்.

ஒரே பணியில் புலன்களும் பொறிகளும் தம்தம் நிலையில் இயங்கித் தொழிற்பட்டு அப்பணியைத் தம்தம் நிலையில் வளர்த்துச் செழுமைப்படுத்துகின்றன. இங்ஙனம் செய்யப்பெறும் செயல்கள் தரமுடையனவாக அமையும்; பயனுடையனவாகவும் அமையும். ஒன்றோடொன்று தொடர்பில்லாத பணிகளிலும் ஈடுபடலாம். இப்பணிகள் பயன் தருவனவாக அமைவது அருமை.

ஒன்றுக்கொன்று மாறுபட்டு முரண்பட்ட நிலையிலும் பணிகள் நிகழ்வது உண்டு. இப்பணிகள் பயனும் தரா. எதிர்மறையான துன்பத்தையும் தரும். சிந்தையில் தீய எண்ணங்களும் செயலில் நல்லவையும் காட்டி நடிப்பவர்கள் மிகுதி. இத்தகையோர் செய்யும் செயல்கள் நற்பயனைத் தராதது மட்டுமின்றித் துன்பத்தையே அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தரும். எச்செயலுக்கும், தாவிப் படர்ந்து விரிவடையும் இயல்புண்டு.

ஆதலால், ஒருவரின் தீமை அவரளவில் நின்று விடுவதில்லை. அத்தீமை விரைவில் படர்ந்து சமுதாயத்தில் தீமையைப் பரப்பும், வளர்க்கும். அப்போது சமுதாயமே தீமை மயமாகி விடுகிறது. அத்தீமையை எதிர்க்கும் ஆற்றலின்மையாலோ, பலவீனங்கள் காரணமாகவோ, தீமையிடத்தும் நடுவுநிலை என்ற நிலையை மேற்கொண்டதாலோ ஆசைகள் காரணமாக சிந்திக்கும் திறனின்றி, தீமைக்கு உடன்பட்டு போவதாலோ பலர் தீமையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது; சமூகமே கெட்டுவிடுகிறது; அல்லது 'கெட்டது' என்று பெயர் பெறுகிறது.

ஒரு வஞ்சிப்பத்தன் செய்த தீமை ஒரு பேரரசையே கெடுத்துவிட்டதே! எவ்வளவோ திறமுள்ள அரசாய் இருந்தும் நெறிமுறைப்படுத்தும் சூழல்கள் வலிமையாக