பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

133


உணர்வாகி, பொறிகள் வாயிலாகத் தொழிற்படுகின்றன. இவற்றில் அக உறுப்புகளின் தொழிற்பாடுகள் நமக்கு எதிரில் தெரியவருவதில்லை. ஆனால், வாழ்க்கையில் அகி உறுப்புகளின் செயற்பாடே பயன் தருகின்றன.

ஊழ் என்பது என்ன?

வாழ்க்கை வினையினால் ஆயது; வினைக்காளாவது; வினைக்கே உரியது. “வினையே ஆடவர்க்கு உயிரே” என்பது இலக்கியம். செயல்கள்-செயல்களுக்கு உந்து சக்தியாக அமைந்து காரணமாக இருக்கும் நோக்கம் ஆகியன, ஊழ் அமையும் களங்கள். ஊழிற்குச் செயல்கள் காரணமாக அமைவது முதன்மையான காரணமாகா.

செயல்களுக்குரிய நோக்கமே ஊழின் களம். சிந்தனையும் நோக்கமும் செயலும் மாறுபடா. ஒரே நிலையிலிருப்பதுதான் இயற்கை எளிய முயற்சிகளின் வழிப்பட்டது. ஒன்றுக்கொன்று மாறுபட்டுச் செயற்படுவது கடினமானது; செயற்கையானது. ஆனால், மனித உலகிலோ இக்கடினமான சிந்தனை, செயல் மாறுபட்ட நிலையில் வாழ்வோரே மிகுதி.

பழகுவோர் பலர் பயன் விளைவிப்பது எது? பயன்படுவது எது? உலகியலில் உடனடியான பயன்களை - தற்காலிகமான பயன்களை, சிந்தனை மாறுபட்ட செயல்கள் தரும். ஆனால், நல்லனவாகவும் நெடியனவாகவும் உள்ள பயன்களைத்தரா. நெடிய பயனை, நிலையான பயனை, இன்புறு நலன்களைத் தருவது சிந்தனையின் உள்ள நோக்கமேயாகும்.

சிந்தனை வேறு, சொல்வேறாக நண்பர்கள் போலப் பழகின், அந்நட்பில் உயிர்ப்பு இருக்காது. உள்ளூற பகை வளர்ந்து கொண்டிருக்கும். என்றாவது ஒருநாள் பொருது கொள்வர்; அழிவர். அதுபோலவே ஒரு பணியில், சிந்தனை