பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

157


பெற்றிருப்பான்; வாழ்ந்திருப்பான்; பாண்டியனுக்கும் பெருமை சேர்த்திருப்பான்; நாட்டின் தீய சக்தியாகிய பொற்கொல்லன் ஒதுக்கப்பட்டிருப்பான்.

நல்லன சிந்தித்து, ஆற்றலோடு செயல்பட வேண்டியவர்கள், அங்ஙனம் வாழத் தவறுவதன் மூலம், தீய சக்தியை வளர்த்து விடுகிறார்கள் என்பது வரலாற்றுக் கருத்தாகிறது.

பாண்டியனின் ஊழ்

பாண்டியப் பேரரசு, அரசியல் நெறிமுறை பிறழாத பேரரசு முறை செய்து காப்பாற்றும் அரசு, செய்தியறிந்து கொள்ள, தவறுதலாகக் கதவைத் தட்டி கணவன் மனைவியிடையே ஐயப்பாடு தோன்ற காரணமாக இருந்ததற்காக, தனது கையையே வெட்டிக் கொண்ட பொற்கைப் பாண்டியனின் வழிவழி வந்த அரசு, பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கொற்றமும் அறநெறிக் கொற்றமேயாகும்.

இளங்கோவடிகள், புறஞ்சேரியிறுத்த காதையில் பாண்டிய மன்னனின், செங்கோன்மைச் சிறப்பையும் உலகு தழுவிய புகழுடைய பேரரசாக விளங்கியதையும் விளக்கிக் கூறி வாழ்த்துகிறார்.

கரடிகள், கொடிய பாம்புகள் வாழும் புற்றினை அகழா. புலிகள் மான்களோடு மாறுபடாது விளையாடும் இயல்பின. முதலையும், தெய்வமும், இடிகளும் கூட யாருக்கும் துன்பம் செய்வதில்லை என்று பாராட்டுகிறார்.

“கோள்வ லுளியமும் கொடும்புற் றகழா;
வாள்வரி வேங்கையும் மான்கண மறலா;
அரவும் சூரும் இரை தேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என
எங்கணும் போகிய இசையோ பெரிதே!”

(புறஞ் சேரியிறுத்த காதை, 5-10)