பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

161



கற்பு என்பது. ஒழுக்கத்தின் மறு பெயரே. பெண்ணின் ஒழுக்கத்தை சிறப்பித்துச் சொல்லும் பொழுது, கற்பு என்று குறிப்பிடுவது இலக்கிய வழக்கில் வந்திருக்கிறது.

எந்த வாழ்க்கைக்கும், அன்பே அடித்தளம். அன்பில்லாத எந்த உறவும் பயனற்றது. அதிலும் ஒருவனும் ஒருத்தியுமாகக் கூடிய நெடிய நாட்கள் வாழ வேண்டுமானால், அவர்களுடைய அன்பு ஆழமானதாக, அகலமானதாக, உறுதியானதாக இருக்க வேண்டும்.

மென்மையான அன்பு, உறுதிப்பாட்டில் கல்போல விளங்க வேண்டும். கற்பு என்ற சொல்லின் பகுதி ‘கல்’ என்பதாக இருக்க வேண்டும் போலத் தெரிகிறது. இங்கு, ‘கல்’ என்பது உறுதியின் பாற்பட்டது.

கற்பு என்ற சொல் இன்று கருதுவதைப் போலக் குறிப்பிட்ட உடலொழுக்கத்தை மட்டும் குறிப்பிடுவதன்று; விரிந்த பொருளுடையது.

தூய அன்பு, கணவனுக்காகத் தியாகம் செய்தல், வாழ்க்கையில் அனைத்துத் துறையிலும் கணவனுக்குத் தோழமையாதல், துணை நிற்றல் ஆகிய அனைத்தும் சேர்ந்த ஒழுக்க நெறிக்கே, கற்பு என்று பெயர்.

காலப்போக்கில், பெண் அடிமைத்தனம் வந்த பிறகு பெண்ணின் உடலைச் சார்ந்ததே கற்பு என்று சிறிய எல்லை வகுத்துவிட்டனர். உயர்ந்த கற்புடைய பெண்ணின் இலக்கணம் கணவனை வாழ்வித்து வாழ்தல், உயர்த்தி உயர்தல், உடலும் உயிரும் என வாழ்க்கையில் ஒன்றாகி விடுதல். இந்த இலக்கணங்கள் கண்ணகியிடத்தில் பொருந்தி யிருந்த நிலையினைக் காண்போம்.

கண்ணகி, கோவலனாகிய தலைமகனுக்கு முற்றும் ஈடு கொடுக்கும் தலைமகளே யாவாள். கோவலனின் உயிரும், உணர்வும் மகிழ்ந்து இன்புறத்தக்க அளவிற்கு அவள் இன்பப்