பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மேலும் கணவன் மீது அயலார்-பகைவர், தகாத பழியைக் கூறினாலும், அப்பழியிலிருந்தும், கணவனை மீட்க வேண்டும். இங்ஙனம், எல்லா வகையாலும் கணவனின் புகழை, பெருமையைக் காப்பவளே கற்புடைய பெண்.

கண்ணகி, கோவலனின் பிரிவின்வழித் துன்பத்தை, கோவலன் மாதவியால் சார்ந்து வாழ்ந்ததை, யாரிடமும் எடுத்துக் கூறவில்லை. கடவுளிடமும் கூட எடுத்துக் கூறி, வழிபட மறுத்துவிட்ட மாண்பினை, முன்னர்ப் பார்த்தோம்.

கண்ணகியால், கோவலனுக்கு எந்தப் பழியும் வரவில்லை. ஆனால் மதுரை மாநகரில் கோவலனுக்குப் பழி வந்துவிட்டது. கோவலனுக்குக் ‘கள்வன்’ என்ற பழிச் சொல்லை மதுரையில் கொடுத்துவிட்டனர். பாண்டிய அரசும் கோவலன் மீது பழிகாரர் கொடுத்த பழியை நம்பி, கோவலனுக்குத் தவறிழைத்து விட்டது.

கோவலனுக்கு ஏற்பட்ட மரணத்தைவிட, கண்ணகியை வருத்தியது கோவலன் மீது சுமத்தப்பட்ட பழியேயாம். கோவலன் கள்வன் என்று சொல்லப் பெற்றுக் கொல்லப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டவுடன் கண்ணகிக்குக் கோவலன் மீது எள்ளளவும் ஐயம் ஏற்படாதது கண்ணகியின் கற்புக்குச் சிறப்பு.

கோவலனும், கண்ணகியும் சில ஆண்டுகளே வாழ்ந்தனர். இடையில் கோவலன் கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறான். கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்த காலத்தில், கோவலனின் ஒழுக்க நலன்கள் என்ன ஆயின? என்ற ஆய்வுக்குக் கூட, கண்ணகி தயாராக இல்லை. ஏன்? நம்பிக்கை நிறைந்த நல்வாழ்க்கையில், கண்ணகி நாட்டம் கொண்டாள்.

கண்ணகி, கோவலனின் குறைகளையும் நிறைகளையும் தேர்ந்து தெளிந்தவள். ஆதலால், ‘கள்வன்’, என்று கோவலன்