பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கோவலன் இறந்தவுடன் கண்ணகி இறக்கவில்லை! ஏன்? வாழ்ந்துவிட வேண்டுமென்ற ஆசையா? இல்லை. கோவலன், தன் மீது கள்வன் என்று சுமத்தப்பட்ட பழியை மாற்ற வேண்டிய கடமையை விட்டுச் சென்றிருக்கிறான். அப்பணியைக் கண்ணகி இனிதே செய்து முடித்தாள்.

கோவலன், அவன் மகளாகிய மணிமேகலையைக் காப்பாற்றும் பொறுப்பை மாதவியிடம் விட்டுச் சென்றிருக்கிறான். அதனால் மாதவி உயிர் துறக்க முடியவில்லை. மாதவி, மணிமேகலையை வளர்த்துப் பெளத்தத் துறவியாக்குகிறாள்.

ஏன்! மணிமேகலை கணிகை வாழ்க்கை மேற்கொண்டால் கோவலன் புகழுக்கு இழுக்கு நேரும் என்று எண்ணித்தான்!

இங்ஙனம் பல்லாற்றாலும் சிறந்து விளங்கிய மாதவி பெண்ணில் பெருந்தக்காளாவாள்.


சேரன் செங்குட்டுவன்

சிலம்பு, தமிழ்த் தேசியக் காப்பியம்! சிலம்பு, தமிழகம் தழீஇய இலக்கியம், பழந்தமிழகத்தின் மூன்று அரசுகளையும் போற்றிய இலக்கியம். சோழ, பாண்டிய, சேரநாடுகளைப் பற்றுக் கோடாகக் கொண்டு வளர்ந்த இலக்கியங்கள் பலப்பல.

தமிழ்நாடு சோழர், பாண்டியர், சேரர் ஆகிய மூவேந்தர்களாலும் ஆளப்பெற்று வந்தது. இந்த மூவேந்தர்களுள் சோழப் பேரரசர்கள் திருக்கோயில்கள் கட்டுதல், இசை, நடனம் முதலிய கலைகளை வளர்த்தல், நிலவளம், நீர்வளம் முதலியன பேணுதலில் அதிக ஆர்வம் காட்டினர். அணை கட்டித் தண்ணீர் தேக்கும் நீர்ப்பாசன நிர்வாக மேலாண்மையைத் தமிழ்நாட்டு வரலாற்றில் அறிமுகப்படுத்தியது சோழப்பேரரசே!