பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு சிந்தனை

221



தமிழகத்தின் தனிச் சமயமாகிய சிவநெறியில் இளங்கோவடிகளுக்கு நிறைய ஈடுபாடுண்டு. அவரைச் சிவநெறிச் சார்ந்தவர் என்றாலும் மிகையாகாது. சிவநெறியின் அடிப்படை உண்மை முப்பொருள் அமைப்புடையது. அஃதாவது இறை, உயிர், தளை என்பனவாகும். கோவலனை உயிர்நிலையில் வைத்து ஆராய்ந்தால் அவன் தளையால் தாங்கொணாத் துயருற்றதும் பின்னர் தன்னுடைய பத்தினிப் பெண்டின் கற்புவழியாகக் கடவுளின் கருணைக்கு ஆளானதும் முப்பொருண்மையை விளக்குவனவாக அமைந்துள்ளன.

இளங்கோவடிகள் காலத்தில் தமிழகத்தில் பல்வேறு சமய நெறிகள் பரவி இருந்தன. அந்தச் சமயநெறிகளைப் பற்றியும் வழிபடு தெய்வங்கள் பற்றியும் இளங்கோவடிகள் தம்முடைய காவியத்தில் சிறப்பித்துப் பேசியுள்ளார். எனினும், தமிழக வரலாற்றில் மிகுதியும் சிறப்புடைய சமயங்களாகிய சைவம், வைணவம், சமணம் ஆகிய சமய நெறிகளை விரித்தும் பெருமைப்படுத்தியும் பேசியிருப்பதின் மூலம் சிலம்பு முச்சமய நூலாகத் திகழ்கிறது என்று கருதுவதில் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது.

சமுதாய அமைப்பில் தனிமனிதன், சமுதாயம், அரசு ஆகிய முறைவைப்பு வளர்ந்து பன்னூறாண்டுகளாயிற்று. இந்த முறைவைப்பு மூன்றையும் தழுவிய காப்பியமாகச் சிலப்பதிகாரம் அமைந்திருக்கிறது. கண்ணகி குடிமகள் என்ற பாத்திரமாக விளங்குகின்றாள்-முந்நாட்டு மக்களின் வாழ்வியல், பிறப்பியல்புகள் வரலாற்றோடு இணைத்துப் பேசப் பெறுகின்றன. அடுத்து, மூன்றுநாட்டு அரசர்களும் அரசுகளாகப் பேசப்பெறுகின்றனர். இங்ஙனம், நாடு முதல் மக்கள் வாழ்வு ஈறாகப் பல்வேறு அமைப்புக்களையும் தழுவித் தோன்றிய காப்பியமாகச் சிலப்பதிகாரம் சிறந்து விளங்குகிறது.