பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

229


ஆட்சியியலைப் படிப்படியாக இழந்து வருவதை உணர முடிகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கம், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், பாதுகாப்பின்மை, உத்தரவாதமின்மை ஆகியவற்றால் தனி மனிதனுடைய சுதந்திரம் மறைமுகமாக வில்லங்கப்படுதல் நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டு மக்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வு வேண்டும். கம்பனின் இராம காதையில் வரும் பாத்திரங்கள் பலவும் அரசியல் நெறி பேசுவதை உய்த்துணர்க. கம்பனின் அரசியல் பேச்சு, நம்மனோரை அரசியலில் ஈடுபடுத்து மானால் அது பேச்சுக்கு வெற்றி ஏவி. எம். அறக்கட்டளைக்கு வெற்றி! இனி, பொதுவாக அரசியலுக்கும், அடுத்துக் கம்பனின் அரசியலுக்கும் போகலாம்.

அரசியலின் தோற்றம்

மனித குலம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. மனிதகுல வரலாறு ஒரு தொடர் வரலாறு. தொடக்கத்தில் மனித குலம் அரசியலில், ஆட்சியியலில் பரிபூரண சுயேச்சையுடன் வாழ்ந்திருந்தது. அப்போது சொத்துரிமை இல்லை; பணப்புழக்கம் இல்லை; பண்டப் புழக்கம் மட்டும்தான். அதுவும் தேவைக்குத்தான்! அந்தக் கால வாழ்வியல் முறையை ஆதிகாலப் பொது வுடமைச் சமுதாயம் என்று கூறுவர். அந்தக் காலத்தில், பழக்கங்கள் வழக்கங்களாகி மரபுகளாக இடம் பெற்று, மக்கள் இயற்கையாகவே ஒழுங்கும் ஒழுக்கமும் உடையவர் களாக வளர்ந்தனர்; வாழ்ந்தனர்; வாழ்வித்தனர். தேவைக்கே பொருள். பொருள், மனிதனின் கருவியாக இருந்தது. வரலாற்றுப் போக்கில், மெள்ள மெள்ளப் பொருள் தேவைக்காக மட்டும் அல்லாமல் கெளரவம், அந்தஸ்து, ஆதிக்கம், பிற்காலப் பாதுகாப்பு என்ற நிலைகள் தோன்றின. இந்தப் பொய்ம்மையின் அடிப்படையில் அல்லது அவசியமற்ற காரணங்களின் அடிப்படையில், மக்கள்