பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/271

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கடமையா? என்ற போராட்டம். கடைசியில் உறவு நலமே வெற்றி பெற்றது. உறவுக்காகப் போராடி இராவணனுக்காகச் செருகளத்தில் மரணத்தைத் தழுவ அனைவரும் ஆயத்தமாயினர். இராவணன் சுத்த வீரன். ஆதலால், அடைக்கலம் புக நாணப்படுகிறான். இராமனின் பகையை “நல்ல பகை” என்று பாராட்டுகின்றான்.

‘என்னையே நோக்கியான் இந் நெடும்பகை தேடிக் கொண்டேன்’ என்கிறான்; தனித்து நின்று போராடுகின்றான்.

இராவணன் மரணம் உறுதியான பிறகும் கூட, அவன் நெறிமுறை பிறழ்ந்த காமத்தின் வழி செல்லாமல் செருகளத்தில் போரிட்டு மாயவே விரும்பினான். இறுதிநாள் செருகளத்துக்குச் செல்லும்போது, இன்று போர் முடியும். போரின் முடிவில் இராமனின் மனைவி சீதை வயிற்றில் அடித்துக்கொண்டு அழுவாள் அல்லது என் மனைவி மண்டோதரி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுவாள் என்று கூறிவிட்டுப் போர்க்களத்திற்குப் புறப்படுகின்றான்.

“மன்றல் அம் குழல் சனகிதன் மலர்க் கையான் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன் மகள் அத்தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆகுவென், தலைப்படின் என்றான்.”

(கம்பன்-9667)

இறுதிக் காலத்தில் இராமனின் மனைவி சீதை என்பதை இராவணன் உறுதிப் படுத்துகின்றான். இராவணன் சீதையை வலிய அணுகாததற்குக் காரணம், விரும்பாத ஒரு பெண்ணை இராவணன் தீண்டுவானாகில் அவனுடைய தலை வெடிக்கும் என்ற சாபம் உண்டு என்று திரிசடை வாயிலாகக் கூறப்படுகிறது. மரணம் உறுதியான நிலையில், காமவெறியனாக இராவணன் இருப்பின், சாபத்தைப்