பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

265


உலோபகத்தனம் ஆகியவற்றிலிருந்து விடுபடுதல், எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வாழ்க்கை வாழ்தல், நூல்களைப் படித்தல், பிறருக்கு உதவுதல், ஆணவத்தை அறவே விலக்குதல், பகிர்ந்துண்ணல் எல்லா உயிர்களையும் தம் உயிர் போலவே பாவித்தல் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் உள்ளமையை உணர்தல் இவையெல்லாம் தருமம்.

ஒளவையார் ‘அறம் செய விரும்பு’ என்று கூறும்பொழுது கொடுத்தலையே குறிப்பிடுகிறார். பொதுவாக அற நெறி சார்ந்த வாழ்க்கை போற்றப்படுகிறது. சீனத்துத் தத்துவ ஞானி கன்பூஷியஸ், ‘அறமே அரச மரியாதையை விடச் சிறந்தது’, என்றார். ‘அறத்தின் வழிநிலையில் அஞ்ச வேண்டா’ என்பது சேக்ஸ்பியர் வாக்கு ‘அறத்தால் வருவதே இன்பம்’ என்பது வள்ளுவம், கோசல நாட்டு மக்கள் அறத்தாற்றில் நின்று ஒழுகியவர்கள். அறம் போல், சரயு நதி கால்கள் வழி ஒடி நாடெலாம் வளர்த்துக் கடலில் கலந்தமையை விளக்கும் பாடல்கள் பலப்பல.


மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனு நெறி
போன தண்குடை வேந்தன் புகழ் என,
ஞானம் முன்னிய நான்மறை யாளர்கைத்
தானம் என்னத் தழைத்தது நீத்தமே.

(கம்பன் - 16)

என்பது அவற்றுள் ஒரு பாடல்.

மருதநில மக்கள்

கோசலநாடு மருத நில வளமும், முல்லை நில வளமும் கொழித்த நாடு. அந்த நிலப்பகுதிக்கு ஏற்றவாறு மக்களின் ஒழுகலாறு, பொழுதுபோக்கு, மகிழ்ச்சி முதலியன அமைந்திருந்தன என்று கம்பன் விளக்குகின்றான். மருத நிலம் இயலுக்கும் இசைக்கும் களமாகும். விழாவயர்தலும் மருத நில மக்களின் பழக்கம். கோசல நாட்டு மக்கள் சொற்பொழிவுகள் கேட்டு மகிழும் இயல்புடையோராயிருந்தமை