பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/321

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காட்டி ஓடவில்லை. இத்தகு சீர்மையுடைய இராவணனை இராமன் கண்டான். இராவணனை எவராலும் எளிதில் வெற்றி கொள்ளமுடியாது. இராமனே, நீ வெற்றி பெற்றதற்குக் காரணம் உன் வீரமன்று. இராவணன் சீதையின் பால் வைத்த காதலினாலேயாம். உடன் துணை நின்றது நின் கோபம். இவ்விரண்டினாலன்றி இராவணனை வெல்ல இயலாது என்று கூறுகிறான் விபீடணன்.

மும்மடங்கு பொலிந்த முகங்கள்!

போர்க்களத்தில் மாண்டு கிடந்த இராவணனின் முகம் முன்பு இருந்ததை விடப் பொலிவடைந்ததாகக் கம்பன் பாடுகின்றான். பொதுவாகப் பலருக்கு உயிருடன் வாழும் பொழுதே முகத்தில் சவக்களை தட்டும். இராவணனுக்கோ அவன் மாண்டு பிணமான பிறகு, அவனுடைய முகங்கள் மும்மடங்கு பொலிந்தன என்கிறான் கம்பன். மும்மடங்கு பொலிவு எனின் எப்படி? இராவணன் சீதையைத் தன் மனச்சிறையிலிருந்து விடுவித்ததால் ஏற்பட்ட பொலிவு ஒன்று. இராமனை ‘நல்ல தோர் பகை’ என்று எண்ணியதால் ஏற்பட்ட பொலிவு இரண்டு. இராமன் பரம்பொருள் என்று தெரிந்தும் புகழ் ஒன்றையே விரும்பிச் சாகும்வரை போர் செய்ததால் ஏற்பட்ட பொலிவு மூன்று என எண்ணலாம். அங்ஙனம் எண்ணுவது முறையும் கூட!

இராமனின் ஏச்சும் சீதையின் துயரும்

சீதை மீட்கப்படுகின்றாள்; விபீடணன் சீதையை இராமனிடம் அழைத்து வருகின்றான். இந்த இடத்தில் இராமகாதை தடம் மாறகின்றது. எதிர்பாராமல் இராமன் சீதையைத் திட்டத் தொடங்குகின்றான். வில்லிலிருந்து அம்புகள் புறப்படுவது போல் சுடு சொற்களால் சீதையைத் சுடுகின்றான்.