பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.

(புறம் 184)

என்று புறநானூறு பேசுகிறது.

நாடும் ஆட்சியும் செழித்து விளங்க, தண்ணீரே இன்றியமையாதது. நீரின்றி அமையாது உலகு என்பது தமிழ் மறை. உடல், உயிர் தாங்கி வாழ்வோர்க்கெல்லாம் தண்ணீர் இன்றியமையாதது.

உடல்-உயிர் கூட்டு வாழ்க்கை இனிதே நிகழ உணவு தேவை. நீரும் நிலமும் குலந்திடின் உணவு ஆகும். அவ்வுணவை வழங்கியோர் உடலையும் உயிரையும் பிணைத்த வராவார். நிலப்பரப்பு அகன்றதாயினும் நீரும், உழவர் தம் முயற்சியும் ஒத்து இசையாத வழி அரசு தோற்கும்.

ஆதலால் வான்மழை பெய்துழி, அம்மழைத்தண்ணீரை ஏரிகளில் தேக்கிப் பாதுகாக்கும் அரசர்கள், செல்வம் முதலியவற்றைப் பிணைத்துக் கொண்டவர்களாவர். இவ்வுலகத்தில் அவர்கள் பெயர் நீங்காது நின்று நிலவும். நீர் நிலைகளை, ஏரிகளை அமைக்கத் தவறும் அரசர்கள் இந்நிலவுலகில் தம் பெயரை நிலை நிறுத்திக் கொள்ளாதவர்கள் ஆவர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தண்ணீரை - அணைகட்டித் தேக்கி, ஏரிகளில் தேக்கி வேளாண்மைக்குப் பயன்படுத்தும் சிறந்த வாழ்வியற் கருத்தைச் சங்கத் தமிழர் மேற்கொண்டிருந்தனர் என்பது எண்ணி எண்ணி இறும்பூதெய்தக் கூடிய செய்தி.

நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே