பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடையாளமாக “உடம்பிற்காக இல்லாது போனாலும் ஊருக்காகவாவது வேண்டாமா?” என்ற பழமொழியே தோன்றிவிட்டது. நான்குபேர் என்ன நினைப்பார்கள் என்ற கவலை எத்தனை மனிதரை அரித்து அழித்து இருக்கிறது. எத்தனை தூய காதலர்களை அலர் தூற்றி அயர்வுக்கும் கவலைக்கும் ஆளாக்கி அழித்திருக்கிறது. தற்கொலையைத் தழுவிக் கொண்டவர்கள் எத்தனைபேர்? ஒரு நல்ல ஊர் - சமூகம் அமைவது அவ்வளவு எளிதன்று.

ஊர் என்றால் நாலுமறிந்த நல்ல பெரிய மனிதர்கள் நாலுபேராவது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உயிர் வாழ்க்கை உவப்புடையதாக அமையும். ஊரிலுள்ளோரில் பலர் கல்வியறிவில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும். புலனழுக்கற்ற அந்தணாளர்களாக விளங்க வேண்டும். அவர்கள் தன் முனைப்பு அற்றவர்களாகவும் அடக்கமும் பணிவும் -உடையவர்களாகவும் அமையவேண்டும். அத்தகைய ஊர் நன்நடை நல்கும் ஊர். ஒழுக்கத்திற்கு உருக்கொடுக்கும் ஊர். பிசிராந்தையார் வாழ்ந்த ஊர் அத்தகைய நல்ல ஊர். ஆதலால் ஆண்டு பலவாக நரையின்றி வாழ்ந்தேன் என்று பெருமிதத்துடன் கூறுகின்றார் பிசிராந்தையார்.

மருத்துவ உலகில் “பஞ்ச கல்பம்” என்று, ஒன்று கூறுவர். இந்தப் பஞ்ச கல்ப மருந்தை உண்பவர் நெடிது வாழ்வது என்பது நம்பிக்கை; அதுவும் ஆராய்ச்சிக்குரியது. ஆயினும் பிசிராந்தையார் தந்துள “பஞ்ச கல்பம்” கிடைத்திடின் காலத்தை வென்று வாழலாம். என்றும் இளைஞராக வாழலாம். இது முக்காலும் உண்மை.

பிசிராந்தையார் தந்துள பஞ்ச கல்பத்தை மீண்டும் ஒரு தடவை சிந்தனை செய்யுங்கள். மனைவியும் மக்களும் மாட்சிமைமிக்க குணங்களுடையவர்களாகத் திகழவேண்டும். நாம் கருதுவதையே கருதிச் செயலில் துணை நிற்கும் ஏவல்